ரஜினியை சந்தித்ததில் கோபம் கிடையாது: மோடியுடன் மேடையேறுவேன் : விஜயகாந்த்

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, தே.மு.தி.க., வேட்பாளர் ஈஸ்வரனுக்கு ஆதரவு கேட்டு, வாழப்பாடி, ஆத்தூரில் தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் பேசியதாவது:
தமிழகத்தில் தொடர்ந்து வரும் மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காணாத, முதல்வர் ஜெயலலிதா, மக்களிடம் வாய்தா கேட்கும், 'வாய்தா ராணி'யாக மாறி விட்டார். தேர்தல் முடிந்ததும், தமிழகத்தில் மின்வெட்டு, 10 மணிநேரமாக அதிகரிக்கும்.தமிழகத்தில், 'அம்மா' குடிநீர், 'அம்மா' உணவகம் என, பெயர் வைக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.,வை உருவாக்கிய, எம்.ஜி.ஆரை மறந்து விட்டனர்.இவ்வாறு, விஜயகாந்த் பேசினார்.
ஆத்தூரில்...
பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி ரஜினியை சந்தித்ததில் எனக்கு கோபமோ, வருத்தமோ கிடையாது. சேலத்தில் நரேந்திர மோடி பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் நான் பங்கேற்கவுள்ளேன்.தற்போதுள்ள நிலையில், ஜீ பூம்பா போல், மின்சாரம், குடிநீர் கொண்டு வர முடியாது. நரேந்திர மோடி பிரதமரானதும், இரண்டு ஆண்டுகளில், மின்சாரம், குடிநீர் வழங்கப்படும். இல்லையெனில், 2016, சட்டசபை தேர்தலில், ஓட்டு கேட்டு வரும் போது, என் சட்டையை பிடித்து கேட்கலாம்.இவ்வாறு, விஜயகாந்த் பேசினார்.
கரியை திருடிய காங்கிரஸ்காரர்கள்- தமிழகத்தில் சிப்ட் முறையில் ஆட்சி ; மோடி
கிருஷ்ணகிரியில் மோடி பேச்சு : கண்டிகுப்பத்தில் மோடி பேசியதாவது; இந்த நாட்டில் கடந்த 10 ஆண்டு கால ஊழலுக்கு காங்., பதில் சொல்ல வேண்டும் . காங்., ஆட்சி இனியும் நீடிக்க கூடாது ; இது மக்களுக்கான தேர்தல் , வேலை வாயப்பு கொடுத்ததாக காங்., பொய் சொல்கிறது. நான் அனைத்து மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். மக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது . டில்லியில் இருக்கும் காங்., ஆட்சி இனி இருக்காது . இது மக்களுக்கான தேர்தல் . நான் முதன் முறையாக குஜராத்தில் வெற்றி பெற்றபோது, சாப்பிடும் போதாவது மின்சாரம் கொடுங்கள் என்று மக்கள் கேட்டனர். 3 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக 365 நாட்களும் மின்சாரம் வழங்கப்படுகிறது. குஜராத்தில் மின்சாரம் முறையாக வழங்கப்படுகிறது. குடிநீர் பிரச்னையை நாங்கள் தீர்த்து விட்டோம்.

தமிழகம் முன்னேற வேண்டுமானால், மின்சாரம் வேண்டுமா ? வேண்டாமா ? இந்த மின்சார தட்டுப்பாட்டுக்கு யார் காரணம் ? இந்தியாவில் பல லட்சம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இதற்கு யார் காரணம் ? ,
கரியை பூட்டித்தான் வைக்கனும் : மின் தட்டுப்பாட்டுக்கு நிலக்கரி இல்லை என்கின்றனர். இந்த நிலக்கரியையும் திருடி விட்டார்கள். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போடப்பட்டபோது நிலக்கரி ஆவணங்கள் எங்கே என்று கேட்டனர். அதுவு ம் காணாமல் போய்விட்டது என்றனர். நிலக்கரியை பிச்சைக்காரனும், திருடனும் கூட எடுக்க மாட்டான் ஆனால் காங்கிரஸ் காரர்கள் இதையும் திருடி விட்டு போய் விட்டனர். இன்னும் போகுற போக்கை பார்த்தால் கரியை பூட்டித்தான் வைக்க வேண்டும். வாஜ்பாய் ஆட்சியில் நதிகள் இணைப்பு திட்டம் கொண்டு வந்தோம். இது நடைமுறைப்படுத்த விடாமல் காங்., பாழ் செய்து விட்டது.
9ஆயிரம் கிராமங்களுக்கும் குடி நீர் வழங்கி இருக்கிறோம். இதற்கென அமைக்கப்பட்டுள்ள பைப்லைன் மீது யாரும் பயணம் செய்ய முடியும்.

தமிழக சிப்ட் முறை ஆட்சி : தமிழ்நாட்டில் சிப்ட் முறையில் ஆட்சி நடக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க, என மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றனர். இவர்கள் ஆளுக்கொரு முறை மாறி, மாறி குறை கூறி வருவர். ஆனால் நாங்கள் மகத்தான வெற்றிக்கூட்டணி தற்போது அமைத்துள்ளோம். இங்குள்ள கூட்டணி மிக வலுவான கூட்டணி ஆகும். வரும் நாட்களிலும் இந்த கூட்டணி தொடரும். நாங்கள் தான் வலுவான மாற்று கட்சி. முதன்முறையாக அமைந்துள்ள இந்த கூட்டணிக்கு வெற்றி அளித்து மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுங்கள். இவ்வாறு மோடி பேசினார்.

தமிழகத்தில் மோடி சூறாவளி பிரசாரம் :ஒரே நாளில் 3 நாட்களில் பிரசாரம் செய்கிறார். கிருஷ்ணகிரியை அடுத்து சேலத்தில் இரும்பாலையில் , கோவையில் கொடிசியா அரங்கத்திலும் பேசுகிறார். இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அவர் வருகையை முன்னிட்டு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் பல பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். நாளை மாலை ராமநாதபுரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
மோடியை நடிகர் விஜய் சந்திக்கிறார் ; தேர்தல் பிரசாரத்திற்கு இன்று வரும் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை நடிகர் விஜய் கோவையில் சந்திக்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஓட்டலில் நடக்குமா அல்லது ஒரே மேடையில் ஏறுவாரா என்பது இது வரை தெரியவில்லை. இருப்பினும் இந்த சந்திப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விஜய் தனது டுவிட்டரில் மோடியை சந்திக்கும் தருணம் மகிழ்ச்சியானதாக இருக்கும். இதனை எதிர்நோக்கி இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மோடி கடந்த வாரம் சென்னையில் நடந்த 13 ம் தேதி இரவு மீனம்பாக்கத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார். இன்று மோடியின் 2 ம் கட்ட பிரசாரம் ஆகும்.
மேடையில் மோடியுடன்- விஜயகாந்த் : சேலம் இரும்பாலையில் நடந்த பா.ஜ., பிரசார மேடையில் மோடியுடன், விஜயகாந்த் இணைந்து மக்களிடம் ஓட்டு கேட்டார்.
60 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை தருவோம்: மோடி பேச்சு: மின்பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் தொழில்துறை பாதிப்படைந்துள்ளது என பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். சேலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, மின்பாற்றாக்குறைக்கு காரணமான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை தூக்கி எறிய வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாய்ப்பு அளித்தால் 60 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை நாடு பெறும். பல மாநிலங்களில் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். விவசாயிகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பா.ஜ., தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முகத்தை மாற்றக்கூடிய வலிமை தமிழகத்துக்கு உள்ளது. சேலத்தில் தயாரிக்கப்படும் எக்கு ஆலை உலக பிரசித்தி பெற்றது. சேலம் இரும்பை போல், இங்குள்ள மக்களும் வலிமையானவர்கள். ஆனால் இங்குள்ள மக்களின் குறையை கேட்கத்தான் ஆளில்லை என கூறினார்.

கோவை: கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை , லீமெரிடியன் ஓட்டலில் நடிகர் விஜய் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின் போது பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த சந்திப்பு குறித்து விஜய் ரசிகர் மன்றத்தினர் கூறும் போது, மோடி சென்னை வந்த போது, விஜய் சந்திக்க விரும்பினார். ஆனால் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்ததால் சந்திக்கவில்லை. இதனையடுத்து தற்போது கோவை வந்து மோடியை சந்தித்துள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. வெறொன்றுமில்லை என கூறினர். சந்திப்புக்கு பின் நடிகர் விஜய் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்க மறுத்துவிட்டு சென்னை கிளம்பி சென்றார்.
No comments:
Post a Comment