Wednesday, 23 April 2014

மனசாட்சிப்படி ஓட்டளியுங்கள்


இந்திய குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே, தேர்தலில் ஓட்டளிக்கும் உரிமை வழங்கப்படுகிறது. அந்த உரிமையை அனைவரும், தவறாமல் பயன்படுத்தி, லஞ்சம் வாங்காமல், யாருக்கும் பயப்படாமல், மனசாட்சிப்படி ஓட்டளிக்க வேண்டும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார்

வேண்டுகோள் விடுத்தார்.
ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட்டு உள்ளன?
தமிழகத்தில், 24ம் தேதி, அமைதியாகவும், நேர்மையாகவும், ஓட்டுப்பதிவு நடைபெற, தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு, 23ம் தேதி கடைசி கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.அனைத்து ஓட்டுச் சாவடிகளுக்கும், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தேவையான அளவு இருப்பு உள்ளன. ஓட்டுச் சாவடிகளில், குடிநீர், மின்சாரம், கழிப்பிடம், சாய்தள வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஓட்டுச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில், நிழல் இல்லையென்றால், ஓட்டு போட வருவோர் நிற்பதற்கு வசதியாக, 'ஷாமியானா' பந்தல் அமைத்துக் கொள்ளவும், மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு, தனி வரிசை ஏற்படுத்தப்படும்.பாதுகாப்பு ஏற்பாடுகளும், போதிய அளவு செய்யப்பட்டு உள்ளன. எனவே, வாக்காளர்கள் அனைவரும் பயமின்றி வந்து ஓட்டுப் போடலாம். தேர்தல் பிரசாரம், 22ம் தேதி மாலை 6:00 மணியுடன் நிறைவு பெறுகிறது. அதன்பின் யாரும் பிரசாரம் செய்யக்கூடாது. அதை மீறி பிரசாரம் செய்தால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்.

வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு வரவழைக்க, தேர்தல் கமிஷன் சார்பில், என்னென்ன நடவடிக்கை எடுத்து உள்ளீர்கள்?

மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், ஆகியோர் ஓட்டுப்போட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசியது, 'சிடி'யாக தயாரிக்கப்பட்டு, கேபிள் 'டிவி'களிலும், 'டிவி'களிலும், ரேடியோக்களிலும் ஒலிபரப்பப்பட்டுள்ளன. மாவட்டம் தோறும், விழிப்புணர்வு ஊர்வலம், மனித சங்கிலி, கண்காட்சி போன்றவை நடத்தப்பட்டுள்ளன.முக்கிய இடங்களில், சுவரொட்டிகள், ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மூலம், ஓட்டுப் போட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி, மாணவ, மாணவியரைக் கொண்டு, அவர்களின் பெற்றோரிடம், மனசாட்சிப்படி ஓட்டளிப்போம் என, உறுதி வாங்கப்பட்டுள்ளது.அதேபோல் மகளிர் குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆகியோரை கொண்டும், பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், இந்த பணியில் ஈடுபட்டுள்ளன.

எதற்கு கண்டிப்பாக ஓட்டு போட வேண்டும் என்கிறீர்கள்?
இந்திய குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டும், ஓட்டுஉரிமை வழங்கப்படுகிறது. நாம் இந்திய குடிமகன் என்பதற்கு அத்தாட்சி, நமக்கு வழங்கப்பட்டுள்ள ஓட்டுரிமை. அதை நாம் முறையாக பயன்படுத்த வேண்டும். ஓட்டு போடுவது, ஒவ்வொருவரின் கடமை. இதை உணர்ந்து, அதை நாம் ஒழுங்காக செய்ய வேண்டும்.நமது உரிமையை, நாம் பயன்படுத்தாவிட்டால், அது வீணாகும். நமது உரிமையை பயன்படுத்த, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நல்லவர்களை தேர்வு செய்யலாம்.நீங்கள் உங்களுடைய உரிமையை பயன்படுத்தாவிட்டால், வேறு நபர்கள் முடிவு செய்பவர், ஆட்சிக்கு வருவார்.

இந்த தேர்தலில், ஓட்டு போடுவது கடமை என, பிரசாரம் செய்வதோடு, மனசாட்சிப்படி ஓட்டளியுங்கள் என, பிரசாரம் செய்ய என்ன காரணம்?
தேர்தலின்போது, தமிழகத்தில் அதிக பணப்புழக்கம் உள்ளது. வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. இதை தடுக்க, தேர்தல் கமிஷன் சார்பில், பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளோம். எனினும், மக்கள் மனம் மாறினால் மட்டுமே, இதை முழுமையாக ஒழிக்க முடியும். மக்கள் பணம், பரிசு, மது போன்றவற்றை வாங்க மறுத்தால், கொடுப்பது நின்று விடும். எனவே, லஞ்சம் வாங்காமல், மனசாட்சிப்படி ஓட்டளியுங்கள் என, பிரசாரம் செய்கிறோம். லஞ்சம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவது, நமது உரிமையை விற்பதற்கு சமம். அதன்பின் வெற்றி பெற்றவரிடம், எதையும் கேட்க முடியாது. எனவே, ஓட்டை விற்காதீர் என்கிறோம். காய்கறி கடைக்கு சென்று, கத்தரிக்காய் வாங்குவதாக இருந்தால் கூட, ஒவ்வொரு காயாக எடுத்து பார்த்து, நல்லதை தேர்வு செய்கிறோம். அதை விட கூடுதல் முக்கியத்துவத்தை, நம்மை ஐந்து ஆண்டுகள் ஆளப்போகிறவர்களுக்கு தர வேண்டாமா? எனவே, அனைவரும் ஓட்டுச் சாவடிக்கு வந்து, தவறாமல் ஓட்டு போட வேண்டும்.

போட்டியிடுவோரில் நல்லவர்கள் இல்லை என்றால் என்ன செய்வது?
ஓட்டுப்போட விருப்பம் இல்லை என, வீட்டில் இருந்துவிட வேண்டாம். ஓட்டுப் போட விரும்பாதவர்களுக்காக, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் 'நோட்டா' பட்டன் இடம் பெற்றுள்ளது. அதற்கு ஓட்டு போடலாம்.

இந்த தேர்தலில், எவ்வளவு ஓட்டு சதவீதம் எதிர்பார்க்கிறீர்கள்?
எங்களை பொறுத்தவரை, 100 சதவீதம் ஓட்டுப் பதிவாக வேண்டும். கடந்த தேர்தலில், 73 சதவீதம்
ஓட்டுப்பதிவானது. இந்த முறை எவ்வளவு ஓட்டுப் பதிவா கிறது என்பதை அறிய, நாங்களும் ஆர்வமாக உள்ளோம்.

தேர்தலில் நீங்கள் எதை சவாலாக நினைக்கிறீர்கள்?
தேர்தலே சவால் தான். பணியை ஒழுங்காக செய்யும்போது, திருப்தி அளிக்கிறது. சாதாரண மக்கள் கூட, தேர்தல் கமிஷனை தொடர்பு கொண்டு, புகார் அளிக்கின்றனர். தகவல் கொடுக்கின்றனர். அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கிறோம். ஊழியர்களும் ஒத்துழைக்கின்றனர். தேர்தல் அமைதியாக முடிந்து, அதிக ஓட்டுப்பதிவு நடக்கும்போது, முழு திருப்தி ஏற்படும்.

அரசியல் கட்சி தலைவர்கள் சிலர், உங்கள் மீது கோபமாக இருக்கின்றனரே...
அப்படி எல்லாம் இல்லை. அவர்கள் கருத்தை கூறுகின்றனர். அனைத்து தரப்பினரும் தரும் புகார் மனுக்களை பெற்று, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கிறோம்.

தேர்தலையொட்டி பொதுமக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?
அனைவரும் தவறாமல் ஓட்டு போடுங்கள். லஞ்சம் வாங்காமல், மனசாட்சிப்படி ஓட்டளியுங்கள்.

நீங்கள் யாருக்கு ஓட்டு போட முடிவு செய்து உள்ளீர்கள்?
ஓட்டுப்பதிவு ரகசியமாக நடத்தப்படுகிறது. ரகசியத்தை வெளியில் சொல்லக்கூடாது.

லோக்சபா தேர்தல்: வேரும் விழுதுமாய் திகழும் அதிகாரிகள்:



ஜனநாயகத்திற்கு வலுசேர்க்கும் இந்தியத் தேர்தல்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. 16வது லோக்சபா தேர்தல் துவங்கிவிட்டது.இரண்டு மாதகாலம் நடைபெறும் தேர்தலில் கொளுத்தும் வெயிலிலும் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வரிசையில் நின்று ஓட்டு அளிக்கின்றனர்.கண்ணிமைக்கும் நேரத்தில் இந்தியாவின் ஜனநாயகம் விழுந்துவிடும் என்று, 67 ஆண்டு களுக்கு முன் ஆரூடம் சொன்னவர்கள் இப்போது திகைத்துப்போய் இருக்கின்றனர்.மொத்த வாக்காளர்கள், 81.5 கோடி. வாக்குச்சாவடிகள் 9.3 லட்சம். தேர்தல் பணியாளர்கள் 11 லட்சம் பேர் என்ற இந்த பிரமாண்டமான நிர்வாக நடைமுறையை உலகம் பிரமிப்போடு பார்க்கிறது.மூன்று தேர்தல் கமிஷனர்களும் இந்த நிர்வாகத்தின் வெளிப்படை முகம். ஆனால், அவர்களுக்குப் பின்புலமாக எண்ணற்ற அதிகாரிகளும், அலுவலர்களும் அமைதியாகவும், திறமையாகவும் தங்கள் கடமையைச் செய்து வருகின்றனர்.அவர்களில் சிலர் கடமையின் எல்லைக்கு அப்பாலும் சென்று, அயராது வேலை செய்கின்றனர். எனினும் நாட்டுக்காக பணி செய்யும் அவர்கள் எல்லாரையும் நாம் அறிவதற்கில்லை. அப்படிப்பட்டவர்களில் சிலரையாவது நினைவுகூர்வோமே!

நக்சலைட் பகுதிகளில்...:

இடதுசாரி பயங்கரவாதம் அதிகம் உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில், தேர்தல் நடத்துவது, ஒரு பெரிய சவால்.பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான சரியான திட்டமிடல் மிகவும் அவசியம். சத்தீஸ்கர் சட்டப் பேரவைக்கான தேர்தல், 2008 நவம்பரில் நடைபெற்ற போது, வன்முறைக்குப் பயந்தோ, பாதுகாப்பு குறைவானது என்ற எண்ணங்களாலேயோ, சில இடங்களில் ஓட்டுச் சாவடி சென்று பணி ஆற்றாமல் ஓட்டுப்பதிவு நடைபெற்றதாக அறிக்கை தயாரிக்கப்படக் கூடும் என்று தேர்தல் ஆணையத்திற்கு தெரியவந்தது.'எங்கு என்ன நடந்தாலும் அதை மறைக்காமல் சமாளிக்காமல் அப்படியே ஆணையத்திடம் சொல்லுங்கள். போலித் தகவல்கள் கொடுக்க வேண்டாம்' என்று தேர்தல் பணியாளர்களிடம் ஆணையம் சொன்னது.சத்தீஸ்கரில் முதற்கட்ட ஓட்டுப்பதிவு, 2008, நவம்பர் 14ம் தேதி நடைபெற்றது. சில நாட்களுக்குப் பின் சில ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவு நடைபெறவில்லை என்றும், நடந்ததாக போலித் தகவல்கள் தரப்பட்டன என்றும் உள்ளூர் பத்திரிகைகள் எழுதின.முதலில், தொகுதியின் தேர்தல் அதிகாரி அதை மறுத்தார். ஆனால், வேறு சிலர் மூலம் தகவல்கள் பெற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், நிர்வாகம் சொன்னது உண்மை அல்ல என்று புரிந்து கொண்டு, மாநில தேர்தல் அதிகாரியான டாக்டர் அலோக் சுக்லா நேரடியாக கேஷ்கால் தொகுதிக்குச் சென்று இதுபற்றி விசாரித்து, 24 மணிநேரத்திற்குள் அறிக்கை தரவேண்டுமென்று உத்தரவிட்டது. மறுநாள் பிரச்னைக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளுக்கு சுக்லா புறப்பட்டார். அப்போது, 'நக்சலைட் நடமாட்டம் உள்ள அந்த கிராமங் களுக்குச் செல்வது ஆபத்து; பாதுகாப்பு அளிக்கிறேன்' என, நாராயண்பூர் காவல்துறை உயரதிகாரி சொன்னார். அரைமணி நேரம் காத்திருத்த பின்பும், பாதுகாப்பு தரப்படாத நிலையில், தேர்தல் ஆணையம் கொடுத்த கெடுவுக்குள் அறிக்கை தரவேண்டுமென்ற நிர்ப்பந்தத்தினால், பாதுகாப்பு இல்லாமலே போவதென்று முடிவு செய்தார் சுக்லா.பஸ்தர் மாவட்ட கலெக்டர் பார்ஸ்தே மற்றும் நாராயண்பூர் தாசில்தார் ஆகியோருடன் சேர்ந்து, முதலில் ஜீப்பிலும், பின் 35 கி.மீ., மோட்டார் சைக்கிளிலும் பயணப்பட்டு மூன்று கிராமங்களையும் சுற்றிப் பார்த்தார்.அங்கே வாக்குப்பதிவு நடைபெறவில்லை என்பதையும், மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர் என்பதையும், உறுதி செய்துகொண்டு, அதை தேர்தல் ஆணையத்திடம் சுக்லா தெரிவித்தார். பின் அங்கே மறுவாக்குப் பதிவு நடைபெற்றது.நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள பகுதி களில், தமக்கு பாதுகாப்பு தரப்படவில்லை என்ற காரணத்தை சொல்லி, சுக்லா அங்கே போகாமல் இருந்தால், அவரை யாரும் குறை சொல்லி இருக்க முடியாது.இருந்தாலும் கடமை உணர்வு காரணமாக, துணிச்சலுடன் ஆபத்தானவை என்று சொல்லப்பட்ட பகுதிகளுக்கு சென்று, உண்மைகளை கண்டறிந்து வந்தார். அவரைப் போன்று துணிச்சலான அதிகாரிகள் பலர் உள்ளனர். அவர்களைப் பற்றி வெளியே அதிகம் தெரிவதில்லை.

முதல்வருக்கே அஞ்சாத பெண் அதிகாரி



வடக்கே ஒரு மலை மாநிலத்தில், பணியில் சேர்ந்து ஐந்து ஆண்டுகளே ஆன, தமிழகத்தை சேர்ந்த சுதாதேவி என்ற பெண் கலெக்டர் அங்கே, தேர்தல் பிரசாரம் செய்ய வந்த மாநில முதல்வரை தடுத்து நிறுத்தினார். காரணம், முதல்வர், தேர்தல் விதிமுறைகளை மீறி, அரசு வாகனங்களில் வந்தார் என்பதே.அந்த மாவட்டத்தின் இளம் காவல்துறை அதிகாரி, மாநிலத்தின் உயர் போலீஸ் அதிகாரி, முதல்வரின் தேர்தல் பிரசாரத்தில் அவர் குறுக்கிட்டதை கண்டித்த பின்னும், கலெக்டருக்கு ஆதரவாகவே செயல்பட்டார்.'தேர்தல் முடிந்து நான் பதவிக்கு மீண்டும் வருவேன். உங்களை அப்போது ஒரு கை பார்ப்பேன்' என, முதல்வர் பயமுறுத்தியும், அந்த அரட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப் படாமல், அந்த இரண்டு இளம் அதிகாரிகளும், தங்கள் கடமையை செய்தனர். பாராட்டப்பட வேண்டியவர்கள்.

மனீஷாவின் தைரியம்



கடந்த, 2007ம் ஆண்டு, உ.பி., சட்டசபை தேர்தலில், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த, மனீஷா மகிஸ்கர் என்ற பெண் அதிகாரிக்கு, தேர்தல் பார்வையாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.அவருக்கு ஒரு சிறு குழந்தை இருந்தது. அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு, சுற்றி திரிய முடியாது என்று சொல்லி, அவர் தேர்தல் பணியிலிருந்து விலக்கு பெற்றிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை.ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அவரது கணவருக்கும், தேர்தல் பணி கொடுக்கப்பட்டது. அதேநேரம், குழந்தையை கவனித்துக் கொள்ள, யாராவது ஒருவர் வீட்டில் இருக்க வேண்டுமே!எனினும், தனக்கும், தன் கணவருக்கும் வெவ்வேறு நாட்களில் தேர்தல் பணி அளிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து, தன்னை கண்டிப்பாக தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனவும், ஆணையத்திடம் வேண்டினார். அதன்படியே, ஏற்பாடும் செய்யப்பட்டது.அவர் உ.பி., மாநிலத்தில் ராஜா பையா என்ற புகழ் பெற்ற, அதிக குற்றங்களை செய்தவர் வேட்பாளராக நின்ற பிரதாப்கட் மாவட்டத்தில், மனீஷா மகிஸ்கர், சிறப்பாக பணி புரிந்தார்.கடமை மாறாத அந்த அதிகாரிக்கு 'ஓ' போடலாம்! பெருமைப்படுவோம்!இந்திய தேர்தல் ஆணையம், பல பிரச்னை களுக்கு இடையே மிக சிறப்பாக பணி செய்ய முடிகிறது என்றால், அதற்கு காரணம் இத்தகைய கடமை உணர்வு கொண்ட அதிகாரிகளே.வெளி உலகுக்கு தெரியவராமல் கை தட்டுங்கள்! மலர் மாலைகள் இல்லாமல், அவர்கள் பாராட்டத்தக்க பணி செய்து வருகின்றனர். அவர்களை நினைவு கூர்ந்து பெருமைப்படுவோம்!