Sunday, 20 July 2014

ஓவியமா? இல்லை காவியமா?

கோவை நண்பர் விஜயகுமார் ஒரு அழகான ஓவியத்தை தனது முகநூலில் பதிவிட்டு இருந்தார்.பார்த்த உடனேயே இது ஒரு புகைப்படமோ என நினைக்கத்தோன்றும் வகையில் தத்ரூபமாக அந்த ஓவியம் அமைந்திருந்தது. ஓவியம் வரைந்தவர் யார் என்பது தெரிந்தால் அவரை படத்துடன் கவுரப்படுத்தாலாமே என விசாரித்தேன்கள்ளம் கபடமில்லாத ஒரு அழகான கிராமத்து பெண்ணை கொண்டுவந்து நிறுத்தியது அந்த ஓவியத்தில் ஏற்பட்ட ஈர்ப்பு, அதன் மேலான லயிப்பு காரணமாக படத்தை பகிர்ந்து கொண்டேன்; (ஷேர்) அதைத்தாண்டி வேறு எதுவும் தெரியவில்லை என்றார் நண்பர்.


வாசகர்கள் கண்டு பிடித்த ஓவியர்:

இன்னும் கொஞ்சம் தேடலை ஆழப்படுத்தியபோது ஓவியர் பற்றிய விவரங்கள் கிடைத்தது.(விவரங்கள் கொடுத்து உதவிய வாசகர்களுக்கு மிகவும் நன்றி.)
எஸ்.இளையராஜா என்ற அந்த இளம் ஓவியர் சென்னை கீழ்ப்பாக்கம் கார்டனை சேர்ந்தவர். ஆயில் பெயின்ட், வாட்டர் கலர், மற்றும் அக்ரிலிக்கில் ஓவியம் வரைவதில் இவர் சிறந்தவர். ஓவியம் வரைவதற்கு அவர் என்ன பாணியை கடைபிடிக்கிறார் என்பதைவிட ஓவியங்களில் உள்ள பெண்களிடம் காட்டிய கண்ணியம், அழகு ஆகியவைதான் கவித்துவம் பெறுகின்றன. மிகப்பெரிய புகழை இந்த ஓவியர் நிச்சயம் அடைவார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை, அதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரது தொடர்பு எண்: 9841170866.
ஓவியங்களில் கிராமத்து மண் மணம் மணக்கிறது, வெள்ளந்தியான பெண்களின் இயல்பான அழகுடன் காணப்படுகின்றனர். குடிசை வீடுகளும் வீடுகளுக்குள் காணப்படும் விறகு அடுப்பும், அதன் மீது விழும் வெளிச்ச கோடுகளும் அழகோ அழகு.அழுத்தந்திருத்தமான வண்ணங்களுடன் அமைந்துள்ள இந்த ஓவியங்களை இன்றெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கலாம்.
இயற்கையோடு இணைந்த பொற்காலம்:

பாஸ் பண்ணுவதற்கு மட்டும் கொஞ்சமாய் படித்து, நிறைய விளையாடி, தண்ணீர் சேருமோ சேராதோ என்ற சந்தேகம் இல்லாமல் கிடைத்த தண்ணீரை தாகம் தீரகுடித்து, கலோரி பார்க்காமல் சாப்பிட்டு,அது செரிக்க செரிக்க சிரிக்க சிரிக்க பேசி, படுத்தவுடன் தூங்கி, சைக்கிளோடு உறவாடி, பாண்டி, கபடி என விளையாடி இனிமையாக இயற்கையோடு இணைந்து வாழ்ந்த பொற்காலத்திற்கே இந்த ஓவியங்கள் இழுத்துச்செல்வது மட்டும் நிஜம்