கோச்சடையான்

- நடிகர் : ரஜினிகாந்த்
- நடிகை : தீபிகா படுகோனே
- இயக்குனர் :செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின்
உலகமே
ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரஜினிகாந்தின் கோச்சடையான் 3டி
அனிமேஷன் திரைப்படம், ஒருவழியாக தடை பல கடந்து, உலகமெங்கும் இன்று முதல்
கோலோச்ச களம் இறங்கியுள்ளது!
கறுப்பு வெள்ளை
காலத்தில், திரையுலகில் அடியெடுத்து வைத்து, ஈஸ்ட்மென் கலர், கலர் என்று பல
ஆண்டுகளை கடந்து இன்று சலனபதிவாக்க தொழில்நுட்ப வடிவம் எனும் அனிமேஷன்
உலகிலும் அதிரடியாக அடியெடுத்து வைத்திருக்கும் ரஜினி, அத்தொழில்நுட்பத்தை
தன் மகள் செளந்தர்யா ரஜினியின் இயக்கத்தின் மூலம் மிக பிரமாண்டமாக
அறிமுகப்படுத்தி வைத்திருக்கும் பெருமைக்கும் சொந்தக்காரராக திகழ்கிறார்.
திரையுலகின் மேற்கண்ட நான்காவது காலக்கட்டத்திலும், தன் கோச்சடையான்
ஸ்டைலால் தனி முத்திரையை பதித்திருக்கும் ரஜினி, இப்படத்தில் கோச்சடையான்,
ராணா, சேனா என்று மூன்று முகங்களை காட்டி நடித்திருப்பதும்
குறிப்பிடத்தக்கது. இனி கோச்சடையான் ரசிகர்கள் மனதில், வெற்றி சிம்மாசனம்
போட்டு கோலோச்சும் விதம் குறித்து, கதை, களம் குறித்தும், கதாபாத்திரங்கள்
குறித்தும் பார்ப்போம்...
பல நூறு ஆண்டுகளாக
அருகருகே இருக்கும் கோட்டைபட்டினம் நாட்டுக்கும், கலிங்காபுரி நாட்டுக்கும்
பெரும் பகை. இருநாட்டு அரசர்களுக்கும் பரம்பரை பரம்பரையாக பெரும்பகை
இருந்து வருகிறது... கோட்டைபட்டினம் நாட்டை சார்ந்த ராணா, சிறு வயதிலேயே,
வீட்டை பிரிந்து காடு, மலை எல்லாம் கடந்து கலிங்காபுரிக்கு வந்து, தான்
எந்த நாட்டை சார்ந்தவர் என்பதை காண்பித்து கொள்ளாமலேயே அந்த ஊர் அரசன்
ஜாக்கி ஷெரப்பிற்கு, பெரியவனானதும் போர்படை தளபதியாகிறார். ஜாக்கியின்
மகனும், இளவரசருமான ஆதியின் நட்பையும் பெறும் ராணா ரஜினி, தங்கள்
கோட்டைபட்டினம் நாட்டு போர் கைதிகளை அடிமைகளாக பிடித்து வைத்திருக்கும்
கலிங்காபுரி மன்னர் ஜாக்கியிடமிருந்தும், மகன் ஆதியிடமிருந்தும் காபந்து
செய்ய வேண்டி அவர்களையே கலிங்காபுரி போர் வீரர்களாவும் ஆக்கி
பெரும்படையுடன் கோட்டைபட்டினத்தின் மீது படை எடுக்க போகிறார் ராணா ரஜினி.
அவ்வாறு போன இடத்தில் கோட்டைபட்டினத்தின் இளவரசரும், தன் பால்ய
சிநேகிதனுமான சரத்குமாரிடம், தான் இன்னார் என்பதை புரிய வைத்து.,
கோட்டைபட்டின வீரர்களை சொந்த நாட்டு போர்படையில் சேர்த்து, தானும்
சேர்ந்து எஞ்சிய கலிங்காபுரி வீரர்களை மட்டும் கலிங்காபுரிக்கு ஓட
விடுகிறார். இதற்கெல்லாம் காரணம், ராணா ரஜினியின் அப்பா, கோச்சடையான்
ரஜினி, நயவஞ்சகமாக கோட்டைபட்டினம் அரசர், நாசரால் கொல்லப்பட்டதும், அவர்
போட்டு சென்ற சபதமும் தான் என்று ப்ளாஷ்பேக் விரிகிறது...
அப்பா
கோச்சடையான் ரஜினி விட்டு சென்ற பணியை மகன் ராணா ரஜினி எப்படி
சிரமேற்கொண்டு முடிக்கிறார். தளபதி கோச்சடையான் புகழ் பிடிக்காமல்
கோட்டைப்பட்டினம் மன்னர் நாசர் அவரை கொல்லத்துணியும் அளவு செய்த சதி என்ன?
கலிங்காபுரி மன்னர் ஜாக்கிக்கும், கோச்சடையானின் சபதத்திற்கும் என்ன
சம்பந்தம்? அந்த சபதத்தை ராணா ராஜினி எப்படி நிறைவேற்றுகிறார்?
கோச்சடையானின் எதிரி, துரோகிகளை ராணா ரஜினி எப்படி பழிதீர்க்கிறார்? தீபிகா
படுகோன் யார்? அவரை ராணா ரஜினி காதலித்து கைபிடிப்பது எப்படி?
சரத்-ரஜினியின் பால்யகால சிநேகம், மாமன்-மச்சான் பந்தமாவது எப்படி? மூத்த
மகன் சேனாவை மிஞ்சி கோச்சடையானின் இளைய மகன் ராணா வீரனாக திகழ்வது எப்படி?
எனும் எண்ணற்ற கேள்விகளுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும்,
பிரமாண்டமாகவும், பில்டப்பாகவும் பதில் அளிக்கும் கோச்சடையான் படத்தின்
க்ளைமாக்ஸில் வந்து சேரும் சேனா ரஜினி - ராணா ரஜினியின் மோதலை கோச்சடையான்
பகுதி-2ல் பார்க்கலாம் என எதிர்பார்ப்பையும் கிளப்பி விட்டு படத்தை
முடிக்கிறார் இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின்.
ஹாலிவுட்
படங்களுக்கு நிகரான சலனபதிவாக்க தொழில்நுட்ப வடிவம்(அதாங்க, அனிமேஷன்...)
பிரமாண்ட செட்டுகள், பில்-டப்பான ஷாட்டுகள், ரஜினியின் ஸ்டைல் குதிரை சாகஸ
என்ட்ரி, கப்பலில் குதிரையுடன் தாவி, தாவி ரஜினி போடும் சண்டைகள், மாறுவது
ஒன்றே மாறதது, சூரியனுக்கு முன் எழு, சூரியனையே வெற்றி கொள்ளலாம்,
வாய்ப்புகள் அமையாது நாம் தான் அமைத்து கொள்ள வேண்டும்... உள்ளிட்ட
பன்ச்கள், ஆன்மிக அவதாரங்கள், என சகலத்திலும் கோச்சடையான், ராணா என ரஜினி
ஜொலித்திருக்கிறார்.
ரஜினிக்கு இணையாக, தீபிகா
படுகோனும் ஆக்ஷ்னில் பொளந்து கட்டியிருக்கிறார். அனிமேஷன் என்பதையும்
தாண்டி சிற்பமாக அற்புதமாக ஜொலித்திருக்கிறார் அம்மணி!
சரத்குமார், நாசர் ஜாக்கி ஷெரப், ஆதி, ஷோபனா உள்ளிட்ட எல்லோரும் பாத்திமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மானின்
இசையில், வைரமுத்து - வாலியின் வரிகள், கே.எஸ்.ரவிக்குமாரின் கதை, வசனம்,
ரசூல் பூக்குட்டியின் ஒலிப்பதிவு, ஆர்.மாதேஷின் கிரியேட்டிவ், ஆண்டனியின்
படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் செளந்தர்யா பிரமாண்டமாக
ஜெயித்திருக்கிறார்!
கோச்சடையான் , சேனா, ராணா,
செங்கோடகன், வீர மகேந்திரா, பீஜூ மகேந்திரா, ரிஷி கோடம் என அரசர் காலத்து
பாத்திர பெயர்களுக்கே பெரிதும் யோசித்து இருப்பார்கள் போலும்... பேஷ்,
பேஷ்!
மலை மீது பிரமாண்ட அரண்மனைகள், அரங்குகள்,
அழகிய நீர்வீழ்ச்சிகள், இன்னும் இயற்கை எழில் மிகுந்த பகுதிகள், பிரமாண்ட
காலற்படை, குதிரைபடை, யானைபடை என்று நம்மை அரசர் காலத்திற்கு கொண்டு
சென்று விடுகிறார் இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் என்றால் மிகையல்ல.
லதா
ரஜினிகாந்தின் பின்னணி குரலில், படத்தின் டைட்டில் கார்டு திரையில் ஓடும்
போதே ஒரு பெப் தொற்றிக் கொள்கிறது. அது இந்தி நடிகர் அமிதாப்பின்
முன்னோட்டம், கதை, களம் என தொடர்ந்து அது க்ளைமாக்ஸ் வரை நீங்காது
இருப்பதில் கோச்சடையான் ஜெயித்திருக்கிறான்!
சிறியவர்களுக்கும்,
ரஜினி ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும்., பெரியவர்களுக்கும்
பிடிக்கும்... எனும் அளவில் இருக்கிறது கோச்சடையான்!
ஆகமொத்தத்தில், கோச்சடையான் - கோலோச்சுகிறான் - இன்னும் கோலோச்சுவான்!!
--------------------------------------------------------------------
நமது
தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள்
வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில்
திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை
ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள
சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...
வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்
அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com
கோட்டைப்பட்டினம்
நாட்டின் தலைமைத்தளபதி கோச்சடையான், தன் படை வீரர்களுடன்
போருக்குப்போறார். அங்கே வஞ்சகமாக எதிரி நாட்டு ஆட்களால் விஷம் வைத்து அவர்
வீரர்கள் சாகும் தருவாயில் இருக்காங்க. விஷ முறிவு மூலிகை மருந்துக்கு
முயற்சி பண்றப்போ எதிரி “ படை வீரர்கள் எனக்கே கொடுத்துடனும், டீலா? நோ
டீலா? என்கிறார். வீரர்களை தானமா கொடுத்துட்டு நாட்டுக்குத்திரும்பும்
தளபதி தன் மன்னனால் தேச துரோகி பட்டம் சுமத்தப்படறார். மன்னரை விட
தளபதிக்கு நாட்டில் நல்ல பேரு. இது மன்னருக்கு பிடிக்கலை. சமயம்
பார்த்திட்டிருக்காரு தளபதியைப்பழி வாங்க, இந்த சான்ஸ் கிடைச்சதும்
தளபதிக்கு மரண தண்டனை விதிக்கறார். கோச்சடையானின் மகன் எதிரியை எப்படி பழி
வாங்குறார்? என்பதே மீதிக்கதை. சுருக்கமாச்சொல்லப்போனால் அப்பாவை
அநியாயமா கொன்னவங்களை பழி வாங்கும் மாமூல் பழைய கதைதான். ஆனால்
சவுந்தர்யாவின் உழைப்பு, முயற்சி, பட்ட பாட்டுக்கு எல்லாம் நல்ல பலன்.
கே.எஸ்.ரவிக்குமாரின் திரைக்கதை, வசனம், வரலாற்று பின்னணியில் இருந்தும்
போர் அடிக்காமல் போகிறது.
ஹீரோவாக தி ஒன் - ஒன்லி
சூப்பர் ஸ்டார் ரஜினி. ஓப்பனிங்க் ஷாட்டில் குதிரையில், வரும்போது ,
அப்பா ரஜினி ஓப்பனிங்க் சீன் , க்ளைமாக்ஸில் 3 வது ரஜினி ஓப்பனிங்க்
சீன் என தான் ஒரு மாஸ் ஓப்பனிங்க் ஹீரோ என்பதை நிரூபிக்கிறார். அவர் நடை,
தோற்றம் எல்லாம் முடிந்தவரை அப்படியே இருக்கு. குறிப்பாக அவர்
கம்பீரக்குரல், ஸ்டைலிஸ் கலக்கல். அவர் பஞ்ச் டயக்லாக் பேசும்போது மட்டும்
சவுண்ட் எஞ்சினியர் ஸ்பெஷல் எஃபக்ட் கொடுத்து ரசிகர்களைக்கை
தட்டத்தூண்டுகிறார்
ஹீரோயினாக தீபிகா படுகோன். மெழுகு பொம்மை மாதிரி அழகிய வடிவழகு கொண்டவரை நிஜமாகவே பொம்மை மாதிரி ஆக்கி விட்டார்கள். அய்யோ பாவம்.
பாடல் காட்சிகள் பிரமாண்டம். லொக்கேஷன் செலக்சன் குட்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை குட். பின்னணி இசையில் எப்போதும் இரைச்சல். கொஞ்சம் அமைதியாக விடவே மாட்டேன் என அடம் பிடிக்கிறார்.
சரத் குமார் வந்து திரையில் தோன்றும்போது ராதிகாவுக்கே அடையாளம் தெரியாது. என்ன கொடுமை மாயா இது?
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1. கோச்சடையான் கேரக்டர் வடிவமைப்பு, அவர் பேசும் கூர்மையான டயலாக்ஸ் கலக்கல் ரகம்.
2. படம் போட்ட 10 நிமிடங்களில் இது அனிமேஷன் படம் என்பதை மறந்து கதைக்குள் ஆடியன்சை அழைத்துச்செல்லும் லாவகம்.
3.
இண்ட்டர் நேசனல் மார்க்கெட்டுக்காக புக் செய்தாலும் ஏ.ஆர்.ரஹ்மானிடம்
ட்யூன் வாங்கிய சாமார்த்தியம், பார்த்தாயா? என் ரத கஜ துரக பதாதிகளை என
ரஜினி பேசும்போது பின்னணி இசை கலக்கல். அரங்கம் அதிர்கிறது. குட் பிஜிஎம்.
தியேட்டர் விசிட்: ரசிகர்களை திருப்திபடுத்தினார் கோச்சடையான்: நிஜ ரஜினியை பார்த்ததாக பூரிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கோச்சடையான் படம் நேற்று உலகம் முழுவதும்
ரிலீசானது. முதல் அனிமேஷன் படம் என்பதாலும், ரஜினியின் உருவம் மட்டுமே
நடித்திருப்பதாலும் இதனை ரசிகர்கள் எப்படி எதிர்கொள்வார்களோ என்று
தயாரிப்பாளர்களுக்கு கூட சிறிது அச்சம் இருந்தது. ரஜினி நேரடியாக திரையில்
தோன்றி ஆக்ரோஷமாக சண்டைபோடும்போதும், பன்ஞ் டயலாக் பேசும்போதும் கைதட்டி
ஆரவாரம் செய்யலாம். அவரது நிழல் உருவம் தோன்றும்போது அதை எப்படிச் செய்வது
என்று ரசிகனுக்கும் தயக்கம் இருந்தது. ஆனால் இந்த இரண்டும் நேற்று
முடிவுக்கு வந்துவிட்டது.
ரசிகர்கள் உற்சாகம்
கோச்சடையான்
ரிலீசான அனைத்து தியேட்டர்களிலும் ரசிகர்கள் ரஜினியின் நேரடி படம்போன்ற
உற்சாகத்துடன் படம் பார்த்தனர். குதிரை வண்டியில் ரஜினி மலையை தாண்டி
குதித்து நிற்கும் அந்த அறிமுக காட்சியில் மலர்களையும், பேப்பர்
துண்டுகளையும் வீசியும், உற்சாகமா கூக்குரலிட்டும் ஆரவாரம் செய்தனர்.
கோச்சடையான் சிவதாண்டவம் ஆடும் காட்சியில் ரசிகர்கள் விசில் சத்தம், ஆட்டம்
முடியும்வரை தொடர்கிறது.
"நீ போகலாம் என்பவன்
மனிதன் வா போகலாம் என்பவன் தலைவன் நீ மனிதனா தலைவனா?" என ரஜினி பேசும்
போது "தலைவா... நீ வா தலைவா சேர்ந்து போவோம்..." என்று கூச்சலிட்டார்கள்.
"மாற்றம் ஒன்றே மாறாதது" என்று பேசும்போது "நீ மாறு தலைவா" என்கிறார்கள்.
தியேட்டர் விசிட்
இனி ரசிகர்கள் பார்வையில் கோச்சடையான்... (தியேட்டர் விசிட்டில் திரட்டியவை)
சென்னை சாந்தி தியேட்டரில் படம் பார்த்து திரும்பிய ரஜினி ரசிகர் தேவேந்திரன்: "யானை
இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்னுன்னு சொல்வாங்க.
அதுமாதிரிதான் சார் சூப்பர் ஸ்டார் நடிச்சாலும் படம்தான், அவர் உருவம்
நடிச்சாலும் படம்தான். அதான் படத்துக்குக்கு முன்னாடியே அவர் படுற கஷ்டத்தை
காட்டுறாங்களே சார். அதை பார்த்து எனக்கு அழுகையே வந்திடுச்சு தெரியுமா.
இதே தியேட்டர்ல 100 வது நாள் அன்னிக்கும் வந்து பார்ப்பேன் சார்"
சத்யம் திரையரங்கில் படம் பார்த்து திரும்பிய சாப்ட்வேர் என்ஜினீயர் கணேச மூர்த்தி:
"நான் ரஜினி ரசிகன் இல்ல இருந்தாலும் நம்ம சினிமா டெக்னிக்கலா அடுத்த
பிளாட்பார்முக்கு போயிருக்கிறத பார்க்கலாமுன்னு வந்தேன். ரியலி சூப்பர்.
இன்னும் கொஞ்சம் டயம் எடுத்து பண்ணியிருந்தால் இன்னும் பெட்டரா
இருந்திருக்கும்னு நினைக்கிறேன்"
ஆல்பட் தியேட்டரில் படம் பார்த்து திரும்பிய புதுப்பேட்டையில் இட்லி கடை நடத்தும் பரமேஸ்வரி:
"எனக்கு ரஜினி படம்னா உசுரு. ஆனா இது பொம்மை படமுன்னு சொன்னாங்க. நல்லா
இருக்கும் வாமேன்னு என் மவன் இட்டாந்தான். அச்சு அசலா அவர்தாங்க. பொம்மை
மாதிரியெல்லாம் இல்லீங்க. இந்திக்கார புள்ளை ஒண்ணு ரஜினிக்கு ஜோடியா வருது
பாருங்க. இன்னா அழகா கீது. கூட்டம் குறைஞ்சதும் இன்னொரு தபா பாக்கணும்"
அபிராமியில் படம் பார்த்து திரும்பிய கல்லூரி மாணவன் கோமதி நாயகம்:
"நாங்க பிரண்ட்சுங்க 6 பேர் ரிசர்வ் பண்ணி பார்க்க வந்தோம். எங்களுக்கு
படம்மேல கான்பிடெண்ட் இருந்ததாலதான் ரிசர்வ் பண்ணினோம். அந்த நம்பிக்கையை
காப்பாற்றி இருக்காங்க. புது எக்ஸ்பீரியன்சா இருந்திச்சு"
ஐநாக்சில் படம் பார்த்து திரும்பிய தேசிகாச்சாரி: "படம்
நன்னா இருக்கா இல்லியாங்றது பிரச்னை இல்லை. நம்மவா நம்ம குழந்தை சின்ன
வயசுல ஒரு பெரிய வேலையை எடுத்து பண்ணியிருக்கா. அவாளுக்கு நாம சப்போர்ட்டா
இருக்கணுமோல்லியோ. அதான் வந்து பார்த்தேன். சும்மா சொல்லப்படாது பேஷா
பண்ணியிருக்கா. டூ அவர்ஸ் போனதே தெரியல போங்க. அடுத்த வாட்டி மாமிய
கூட்டிண்டு வரணும்"
எஸ்கேப்பில் படம் பார்த்துவிட்டு பெற்றோருடன் திரும்பிய 4 வயது சுவேதா: "அங்கிள்
நாங்க முதல் ஷோவே பார்த்துட்டோம். அதுவும் 3டியில. ரஜினி அங்கிள் என்கிட்ட
வந்து பேசினாரு, அவர் த்ரோ பண்ற அம்பு கண்ணுக்கு நேரா வந்திச்சா நான்
பயந்தே போயிட்டேன். நாசர் அங்கிள்தான் மோசம் ரெண்டு ரஜினி அங்கிளையும்
டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருக்காரு. படம் முடிஞ்சு வெளியில வந்ததும் என்
அக்கா டென்த்துல 490 மார்க் எடுத்த ரிசல்ட் வந்துச்சு. இப்போ சொல்லுங்க
ரஜினி அங்கிள் லக்கி மேன்தானே..."
முக்கிய காரணம்
கோச்சடையான்
ரஜினியின் பொம்மை படம் என்கிற வாதத்தை முறியடிக்கிற விதமாக இந்தப் படம்
உருவான விதம் பற்றியும் அதில் ரஜினி நடிப்பது பற்றியுமான ஒரு முன்னோட்டத்தை
படத்திற்கு முன்னதாக திரையிடுகிறார்கள். அதில் ரஜினி உடல் முழுவதும்
எலக்ட்ரில் வயர்களை சுற்றிக் கொண்டு ஆக்ரோஷமாக நடிப்பது, அம்பு எய்வது,
சண்டைபோடுவது, நடனமாடுவது என அனைத்தையும் செய்கிறார். இதை பார்த்த உடனே இது
ரஜினி நடித்த படம்தான் என்ற முடிவுக்கு ரசிகன் வந்து விடுவதே படத்தின்
வெற்றிக்கு முதல் காரணம் என்கிறார்கள்.