Tuesday, 22 April 2014

கூகிள் ஆட்சென்ஸ் ஒரு கண்ணோட்டம்



கூகிள் ஆட்சென்ஸ் ஒரு கண்ணோட்டம் (Google Adsense)

நீங்கள் உங்களுக்கு வரும் மின்னஞ்சலைப் படிப்பதன் மூலமாகவோ, மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ, விளம்பரங்களைச் சொடுக்குவதன் மூலமாகவோ சுலபமாகப் பணம் சம்பாதிக்கலாம் என்று சொல்லப்போவதில்லை. இங்கு நாம் பார்க்கப்போகும் வழிமுறைகள் உண்மையாகவே நீங்கள் வேலை செய்து சம்பாதிக்கக் கூடிய வழிகள். நியாயமான வருமானத்தை இணையத்தைப் பயன்படுத்திப் பெறுவது எப்படி என்றுதான் நாம் தெரிந்துகொள்ளப்போகிறோம்.

முதலில் நாம் பார்க்கப்போவது 'Google Adsense'. இணைத்தளங்கள் வைத்திருக்கும் யாராயிருந்தாலும், தமது தளங்களில் கூகிளுடைய விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கும் வழி இது. கூகிள் விளம்பரங்களை அந்தத் தளங்களில் வெளியிடும் அதே நேரத்தில், உங்கள் தளத்திற்கு வருபவர்கள் தங்களுக்குத் தேவையான தேடுதல்களை மேற்கொள்ளவும் கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) வழி செய்கிறது.

உங்கள் தளம் எதைக்குறித்தது, அதில் வெளியிடப்படும் விளம்பரங்கள் எத்தகையவை, இவற்றின் அடிப்படையில், உங்கள் தளத்தைப் பார்வையிடுபவர் அதில் உள்ள கூகிள் ஆட்சென்ஸ் விளம்பரங்களைச் சொடுக்குகையில் உங்களுக்கு வருமானம் கிடைக்கிறது.

கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) என்றால் என்ன? அது ஏன் உங்களுக்குப் பணம் கொடுக்கவேண்டும்?
உலகமுழுவதும் உள்ள பல நிறுவனங்கள், கூகிள் தங்களைப்பற்றிய விளம்பரங்களை வெளியிடப் பணம் கொடுக்கின்றன. இது 'கூகிள் ஆட்வேர்ட்ஸ்' (Google Adwords) எனப்படுகிறது. கூகிளில் நீங்கள் எதையாவது தேடுகையில் உங்கள் வலப்புறத்தில் நீங்கள் பார்ப்பது இந்த ஆட்வேர்ட்ஸ்தான். இந்த ஆட்வேர்ட்ஸ் (Google Adwords) விளம்பரங்கள், இணையத்தைப் பயன்படுத்துவோரால் சொடுக்கப்படுகையில், கூகிளுக்கு வருமானம் கிடைக்கிறது. இந்த விளம்பரங்களை, உங்கள் தளத்திலும் வெளியிடுவதன் மூலம், கூகிளுக்குக் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கிறது. அதில் ஒரு பகுதி, உங்களுக்கு (அதாவது இணைத்தளத்தின் உரிமையாளர்களுக்கு) பகிர்ந்தளிக்கப்படுகிறது.

கூகிள் ஆட்சென்ஸில் (Google Adsense) உறுப்பினராவது எப்படி?

உங்களுக்கென்று ஒரு இணைத்தளம் மட்டும் இருந்தால் போதும். கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) விளம்பரங்களை வெளியிடுவது இலவசம்தான். இதற்காக கூகிள் நிறுவனத்திற்கு நீங்கள் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. கூகிள் ஆட்சென்ஸ் கூறும் விதிமுறைகளின் படி உங்களது இணைத்தளமானது இருக்கவேண்டும். தகுதி அளவீடுகளைப் பூர்த்தி செய்யவேண்டும். இவை இரண்டும் இருப்பின் நீங்கள் உங்கள் இணைத்தளத்தில் கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) விளம்பரங்களை வெளியிட விண்ணப்பிக்கலாம். 
அந்நிறுவனம், உங்கள் விண்ணப்பத்தைப் பரிசீலித்து, உங்களுக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என முடிவு செய்யும். நீங்கள் விண்ணப்பித்த ஒரு வார காலத்துக்குள் அனேகமாக, உங்கள் விண்ணப்பம் ஏற்கவோ, நிராகரிக்கவோ படலாம். உங்கள் விண்ணப்பம் ஏற்கப்படின், நீங்கள் கூகிள் ஆட்சென்ஸ் கணக்கைத் தொடங்கலாம். பின்னர், உங்களுக்கு ஒரு 'HTML Code' வழங்கப்படும். அக்குறியீட்டு எண்ணை, உங்களது தளங்களில் நீங்கள் பயன்படுத்தினால், கூகிள் தன்னிடம் உள்ள சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உங்கள் தளத்தின் தலைப்பு, அதன் உள்ளடக்கம் இவற்றுக்குத் தொடர்புடைய விளம்பரங்களை உங்கள் தளத்தில் காட்சிப்படுத்தும். ஒரு சொடுக்கலுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது கூகிளுக்கு மட்டுமே தெரிந்த இரசியம். அது ஒரு சென்ட் ஆகவும் இருக்கலாம், பத்து டாலராகவும் இருக்கலாம்.

கூகிள் ஆட்சென்ஸ் கூறும் விதிமுறைகள் என்னென்ன?
1. உங்களுக்கு என்று ஒரு இணைத்தளமோ (Website), வலைப்பூவோ (Blogspot) இருக்கவேண்டும். இது வரை இல்லையென்றால் இனிமேல் நீங்கள் ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். (ஆனால், சில நேரங்களில் உங்கள் இணைத்தளம் அல்லது வலைப்பூ உருவாகி ஆறுமாதமாவது ஆனால்தான்,கூகிள் ஆட்சென்ஸ் கணக்கைத் துவக்க முடியும். குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தளங்கள்.)

2. உங்கள் வயது பதினெட்டுக்கு மேற்பட்டிருக்கவேண்டும்.

3. கூகிள் ஆட்சென்ஸ் நிறுவனத்தின் சில நெறிமுறைகளை மீறாமல் இருக்கவேண்டும். (இவற்றை விரிவாகப் பின்னர் காணலாம்.)

உங்கள் கணக்கைத் துவக்குவது எப்படி?

முதலில் கூகிள் ஆட்சென்ஸுக்கு நீங்கள் உறுப்பினராவதற்காக விண்ணப்பிக்கவேண்டும். உங்கள் முழுப்பெயர் (உங்கள் சான்றிதழ்களில், உங்கள் வங்கிக்கணக்கில் உள்ளபடி), உங்கள் முழு முகவரி, உங்கள் இணைத்தளத்தின் முகவரி (URL), இவை அனைத்தையும் கொடுக்கவேண்டியிருக்கும். கூகிளின் விதிமுறைகளை மீறமாட்டேன் என்ற உறுதிமொழி கொடுக்கவேண்டும். உங்கள் தளம் கூகிளின் நெறிமுறைகளை மீறாமல் இருப்பின், உங்களுக்கு முன்னால் கூறியபடி ஒர் எண் கொடுக்கப்படும். உங்கள் தளத்துக்கு வருபவர்கள் மட்டுமே விளம்பரங்களைச் சொடுக்கவேண்டும். நீங்களே உங்கள் விளம்பரங்களைச் சொடுக்கினால் அது விதிமுறை மீறல். அப்படிச் செய்பவர்களின் கணக்கை கூகிள் ஆட்சென்ஸ் முடக்கிவிடும்.

உங்கள் கணக்கில் பத்து டாலர்கள் சேர்ந்தபின், உங்கள் முகவரியைச் சரிபார்க்கும் விதமாக, கூகிள் உங்களுக்கு PIN எண்ணை தபால் மூலமாக அனுப்பும். அந்த எண்ணை நீங்கள் உங்கள் கணக்கில் பதிவு செய்தல் மூலம் உங்களுடைய முகவரி சரிபார்க்கப்படுகிறது. கூகிளில் இருந்து நீங்கள் பணப்பட்டுவாடா ஆக இது அவசியம்.

ஒவ்வொரு முறையும் உங்கள் கூகிள் கணக்கில் குறைந்தபட்சமாக 100 டாலர்கள் சேர்ந்தபின், உங்களுக்கு 'கூகிள் நிறுவனத்தில் இருந்து காசோலை அனுப்பப்படும். ஆனால் உடனடியாக அல்ல. உங்கள் கணக்கில் மார்ச் மாதம் 20ம் நாள் இருப்புத்தொகை நூறு டாலர்களைத் தாண்டினால், அது பரிசீலிக்கப்பட்டு, (விதிமுறை மீறல்கள் உள்ளதா இல்லையா என்று), ஏப்ரல் மாதம் கடைசியில் உங்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்படும். உங்கள் பணம் கைக்கு வர மே மாதம் 10 முதல் 15 தேதி ஆகிவிடக்கூடும். நீங்கள் கூகிள் ஆட்சென்ஸ் கணக்கைத் துவக்குகையில் கொடுத்த முகவரிக்குக் காசோலை அனுப்பப் படும்.

கூகிள் ஆட்சென்ஸ் விதிமுறைகள் என்னென்ன?

1 .உங்கள் தளத்தில் உள்ள விளம்பரங்களை நீங்களே சொடுக்குதல் கூடாது. 
2.அதே போல், நீங்களே உங்கள் தளத்திற்கு வருபவர்களை, விளம்பரங்களைச் சொடுக்குமாறு கூறுதல், உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலம் விளம்பரங்களைச் சொடுக்கச் செய்தல் இவையும் நெறிமுறைகளுக்குப் புறம்பானவை.
3 .உங்கள் தளத்திற்கு வருபவர்களுக்கும், விளம்பரங்களைச் சொடுக்குபவர்களுக்கும் சரியீடு செய்தல், விளம்பரங்களுக்குப் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு, விளம்பரங்களைச் சொடுக்க வகை செய்தல் 
இவையும் நெறி முறைகளை மீறியவையே! இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுடைய கணக்கை கூகிள் ஆட்சென்ஸ் முடக்கிவிடக்கூடும். உங்கள் தளம் ஆபாசம், வன்முறை, இன,மொழி, நிற வெறிகளைத் தூண்டுவதாக இருப்பின், உங்கள் தளத்தை கூகிள் ஆட்சென்சுக்குப் பயன்படுத்த முடியாது.

ஏழு ஜென்மத்தையும் அனுபவித்தேன்...



காலையில் நீ தொலை பேசியில் உன் நண்பனுடன் உரையாடினாய்...
உன் முகத்தில் மகிழ்ச்சி, தொடர்ந்த சிரிப்பு..
உடனே கூறினேன், அடுத்த ஜென்மத்தில்,
உன் நண்பனாக பிறக்க வேண்டும் என்று..
அதற்கு நீ வேகமாக வேண்டாம் என்று தலையாட்டினாய்,
அதிர்ந்தேன்... உன் முகத்திலோ சிரிப்பு.. உடனே
அடுத்த கேள்வி கேட்டேன், அடுத்த ஜென்மத்திலும்
மனைவியாகவா??? நீ ஆம் என்று தலையாட்ட..
நானோ, வெட்கத்தில், சந்தோஷத்தில்,
ஏழு ஜென்மத்தையும் அனுபவித்தேன்...

வாலிபரை காப்பாற்றிய ஐகோர்ட் நீதிபதி

உயிருக்கு போராடிய வாலிபரை காப்பாற்றிய ஐகோர்ட் நீதிபதி

திருப்பூர்: திருப்பூர் அருகில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நபரை ஐகோர்ட் நீதிபதி மீட்டு மருத்துவ மனையில் சேர்த்தார். திருப்பூர் தென்னம்பாளையத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகன் நாகராஜ் (35), காட்டுவலவை சேர்ந்த கருப்புச்சாமியின் மகன் குரு (27). நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் பல்லடம் தாராபுரம் சாலையில் இருவரும் பைக்கில் சென்றனர். துத்தாரிபாளையம் என்ற இடத்தில் சென்ற போது, எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். உடன் வந்த குரு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த மதுரை ஐகோர்ட் நீதிபதி பி.என்.பிரகாஷ், உயிருக்கு போராடிய குருவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியதோடு, திருப்பூர் மாவட்ட காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தார்.

உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்ததால் அவரின் உயிரை காப்பாற்ற முடிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுபோன்று விபத்துக்களை காணும் ஒவ்வொருவரும் உயிரின் மதிப்பை அறிந்து உதவ முன்வர வேண்டும் என திருப்பூர் மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.

சக்கரத்தில் ஒளிந்து பயணம் செய்த சிறுவன்

3700 கி.மீ. தொங்கியபடி விமான சக்கரத்தில் ஒளிந்து பயணம் செய்த சிறுவன்

வாஷிங்டன்: அமெரிக்காவில் விமான சக்கர பகுதியில் ஒளிந்து கொண்டு 3700 கிமீ தூரம் பயணம் செய்த சிறுவன் தரையிறங்கும் போது கீழே குதித்து உயிர் தப்பினான். இந்த அதிசய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹவாய் தீவில் உள்ள மவு என்ற இடத்தில் காகுலை விமான நிலைய ஓடு பாதையில் சுற்றி திரிந்த 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் விமான சக்கரத்தில் ஒளிந்து கொண்டு பயணம் செய்து வந்ததாக தெரிவித்துள்ளான். இதுகுறித்து போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததாவது:

அமெரிக்காவில் உள்ள சான்டா கிளாரா என்ற பகுதியை சேர்ந்த சிறுவன், வீட்டில் பெற்றோருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக வீட்டை விட்டு வெளியேறினான். அங்கிருந்து எங்கே போவது என்று தெரியாமல் சான்சோஸ் விமான நிலையத்துக்கு சென்றுள்ளான். அங்கு ஹவாய் ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கர பகுதியில் எப்படியோ சென்று ஒளிந்து கொண்டான். அந்த விமானம் சுமார் 12 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து சென்று 3700 கிமீ தாண்டி ஹவாய் சென்றது.

சுமார் ஐந்தரை மணி நேரம் விமான சக்கரத்தில் ஒளிந்து பயணம் செய்துள்ளான். விமானம் தரையிறங்கும் போது வேலியின் அருகே குதித்துள்ளான். இதில் சிறுவன் எந்த காயமும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கிறான். இதுகுறித்து விமான நிபுணர்கள் கூறுகையில், விமானம் 12 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறக்கும் போது, காற்றில் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும். அதையும் தாண்டி சிறுவன் உயிர் பிழைத்துள்ளது அதிசயம் என்றனர்.
தற்போது இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.