டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் பல நாடுகளில் மக்கள் புரட்சி ஏற்பட காரணமாக இருந்துள்ளன. சில நாடுகளில் ஆட்சி மாற்றங்களுக்கு உதவியாக இருந்தன. குறிப்பாக எகிப்து நாட்டில் புரட்சி ஏற்பட காரணமாக இருந்தது டிவிட்டர்தான். அதற்காகவே டிவிட்டரின் சேவை எகிப்தில் முடக்கப்பட்டது. துருக்கி நாட்டில் டிவிட்டர் மூலம், அந்நாட்டில் நடந்து வந்த ஊழல்கள் குறித்தும், அதில் பிரதமர் குடும்பத்தின் தொடர்பு குறித்தும் கருத்துகள் வெளியிட்ட வண்ணம் இருந்தனர், பொதுமக்கள்.
இதனால், அதை சகித்து கொள்ளும் தன்மையில்லாத மக்களை காக்க வேண்டிய அரசு, அந்நாட்டின் பிரதமர் செசெப் தாயிப் எர்டோகன், டிவிட்டரின் செயல்பாட்டிற்கு தடை விதித்தார். இதனால், டிவிட்டர் தளம் கடந்த மார்ச் மாதம் முடங்கியது. இந்தியாவில் முசாபர்நகரமே பற்றி எரிந்தபோது சமூக வலைதளங்களில் அதில் தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டிய பணியை செய்ய வேண்டியவர்கள், பெட்ரோல் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியதுதான் கொடுமை. பல குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள் சொந்த வீடுகளுக்கு திரும்ப முடியாமல் இன்றளவும் முகாமில் முடங்கி கிடக்கின்றனர். ஏசி அறையில் அமர்ந்து சிலர் தவறான செய்தியை பரப்ப சமூக வலைதளங்களை பயன்படுத்தியதன் விளைவு, அப்பாவி மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக உள்ளனர். சமூக வலைதளங்கள் புரட்சிக்கு மட்டுமல்ல மனிதனின் உயிரை காப்பாற்றும் நோக்கில், ரத்த தானம், கண் தானம் உள்ளிட்ட தகவல்கள் கூட சமூக நோக்கத்துடன் ஒருவருக்கு ஒருவர் பறிமாறிக் கொள்கின்றனர். இதன் மூலம் நூற்றுக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன என்பது நிகழ்கால வரலாறு.
ஆனால், தவறானவர்கள் கையில் அது கிடைத்தால் என்ன ஆகும் என்பதற்கு கேரளாவில் சமீபத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் குற்றவாளிகள் பிடிபடுவதற்கும், அந்த நவீனமே பயன்பட்டுள்ளது. ஆனால், அதற்கு கொடுத்த விலைதான் அதிகம். ஆமாம், 2 அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படும் வாட்ஸ்அப், பல்வேறு புரட்சிகளை செய்து வருகிறது. மருத்துவம், மீடியா, காவல் துறை, ஐடி துறையில் உள்ளவர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
இந்த வாட்ஸ்அப் என்ற நவீனத்தை கொலைக்கு பயன்படுத்தி உள்ளார் ஒரு பெண். கேரளாவைச் சேர்ந்த அவர், ஒரு பெண் குழந்தைக்கு தாய். தான் வேலை பார்க்கும் அலுவலகத்தில், பணியாற்றும் ஆணுடன் தொடர்பு. அதை வழக்கம்போல கண்டித்தனர் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர். அதற்காக அந்தபெண் செய்ததுதான் கொடுமையின் உச்சகட்டம். தன் மொபைல் போனில் வீட்டின் உள்புறம் மற்றும் தப்பியோடும் வழிகளை போட்டோ எடுத்து, அதை வாட்ஸ்அப்மூலம் கள்ளக்காதலனுக்கு அனுப்பி உள்ளார்.
எப்படி வீட்டிற்குள் வரவேண்டும், கொலை செய்து விட்டு தப்ப எந்த வழிகள் உள்ளன என்பதை வரைபடமாக எடுத்தும் அனுப்பி உள்ளார். இதை பயன்படுத்திய கள்ளக்காதலன், கத்தியால் அந்தப் பெண்ணின் கணவர், மாமியார் மற்றும் 4 வயது குழந்தை ஆகியோரை குத்தினார். குழந்தையும், மாமியாரும் இறந்துவிட்டனர். ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் கோடி மதிப்பில் பேஸ்புக் வாங்கிய வாட்ஸ்அப், கள்ளக்காதலர்களின் கொலைக்கும் பயன்பட்டதுதான் வேதனை.
சேவைக்கும், புரட்சிக்கும் பயன்படுத்தப்பட்ட சமூக வலைதளத்தை, தன் கள்ளக்காதலுக்காக பயன்படுத்தி கொண்ட சம்பவம் பல்வேறு கலாசாரத்தில் ஊறி திளைத்த இந்தியாவில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.