
நக்சல்களின் மிரட்டல்
நாட்டில் உள்ள, 543 லோக்சபா தொகுதிகளுக்கு, ஒன்பது கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட ஓட்டுப்பதிவு, ஏப்ரல் 7ம் தேதி துவங்கியது. இதுவரை ஐந்து கட்ட தேர்தல்கள் நடந்துள்ளன. யூனியன் பிரதேசங்கள், கேரளா, அரியானா, டில்லி, ஒடிசா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், ஜம்மு - காஷ்மீர், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சிலவற்றில், முழுமையாகவும், ஒருசில மாநிலங்களில், பகுதியாகவும் தேர்தல்கள் முடிந்துள்ளன.ஐந்து கட்ட தேர்தலில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில், 232 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளன. இன்னும் நான்கு கட்ட தேர்தல்கள் மீதமுள்ளன. இத்தேர்தல்களில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், 311 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளன.இதுவரை ஓட்டுப்பதிவு முடிந்துள்ள, 232 தொகுதிகளில், சராரியாக, 68 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
நக்சல்களின் மிரட்டல் அதிகம் உள்ள பகுதிகள் என, கூறப்படும் சத்தீஸ்கர், ஒடிசா போன்ற மாநிலங்களில், 75 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. எப்போதும் பதற்றமாக உள்ள, காஷ்மீர் மாநிலத்தில் கூட, ஓட்டுப்பதிவு 82 சதவீதமாக உள்ளது.கேரளா, அரியானா மாநிலங்களில், 71 சதவீத மக்கள் ஓட்டு போட்டு உள்ளனர். மக்களின் இந்த ஆர்வம், மாற்றத்தை எதிர்நோக்கி செல்வதாக, அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
மாற்றத்தை விரும்பி
விலைவாசி உயர்வால் ஏற்பட்ட பாதிப்பு, குடும்பத் தலைவியான பெண்ணை கடுமையாக பாதித்துள்ளது. அதனால், மாற்றத்தை பெண்கள் அதிகளவு விரும்புகின்றனர். எனவே, பெண்கள் அதிகளவு ஓட்டு போட்டுள்ளனர் என, தேர்தலை கூர்ந்து கவனித்து வரும், சமூக ஆர்வலர்கள் கூடுதல் ஓட்டுப்பதிவு குறித்து கருத்து கூறுகின்றனர்.புதிய வாக்காளர்கள், பெண்களின் ஓட்டு, முதல் ஐந்து கட்ட தேர்தலில் அதிகரித்து உள்ளது. இதன் எதிரொலி, அடுத்து நடக்க உள்ள, நான்கு கட்ட தேர்தலிலும் இருக்கும் என, எதிர்பார்க்கின்றனர். தமிழகம் போன்ற மாநிலங்களில், பலமுனைப் போட்டி நடக்கிறது. இதில், அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., கூட்டணி இடையே, கடும் போட்டி நிலவுகிறது. மாற்றத்தை விரும்பும் வாக்காளர்களின் ஓட்டுப்பதிவு சதவீதம், அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் அதுபோன்ற நிலையே இருக்கும் என, தெரிவிக்கின்றனர்.
பெரும் சோகம்
அப்படி இருக்கும்பட்சத்தில், மாற்றத்தை விரும்கிறவர்கள், ஏற்கனவே ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக, ஓட்டளிக்கும் மனநிலையோடு வந்து ஓட்டளிப்பர் என்பது தான், அரசியல் நோக்கர்களின் கருத்து. அதனால், தமிழகத்தில் காங்கிரசுக்கு பெரும் தோல்வி பரிசாக கிடைக்கும் என்றும், அவர்கள் கணிக்கின்றனர். அதேபோல, தேர்தல் களத்தில் சரியாக முடிவெடுக்காமல், தனித்து போட்டியிடும் இடதுசாரிகளுக்கும், இந்த தேர்தல் முடிவுகள் மூலம் மாற்றத்தை விரும்பும் மக்கள், பெரும் சோகத்தை ஏற்படுத்துவர் என்றும், அவர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment