Wednesday, 16 April 2014

தமிழர்களுக்காக ரத்தம் சிந்திய ராஜிவ்

' தமிழர்களுக்காக ரத்தம் சிந்திய ராஜிவ்'-குமரி முனையில் சோனியா பேச்சு


கன்னியாகுமரி: காங்கிரஸ் கட்சி , இலங்கை தமிழர்களுக்காக எதுவும் செய்யவில்லை என அரசியல் கட்சியினர் சொல்கின்றனர். காங்கிரசை விட எந்த கட்சி நன்மைகள் செய்தது என்பதை யாரால் சொல்ல முடியும். அருமை தலைவர் ராஜிவ் இந்த மக்களுக்காக ரத்தம் சிந்தியதை யார் மறக்க முடியும் என தமிழக அரசியல் கட்சிகளுக்கு கேள்வி எழுப்பினார்.

தேர்தல் பிரசாரம் செய்ய கன்னியாகுமரிக்கு காங்., தலைவர் சோனியா வந்தார். இங்கு போட்டியிடும் வசந்தகுமாருக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்தார், அகஸ்தீஸ்வரம் முருகன்குன்றத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:

கன்னியாகுமரியில் 3 கடலும் சங்கமிக்கும் இந்த பகுதியில் நின்று உங்களை பார்ப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். விவேகானந்தர் தியானம் செய்த, காமராஜர் தேர்வு செய்யப்பட்ட இந்த மண்ணில் நின்று பேசுவதில் பெரும் மகிழச்சி அடைகிறேன்.

கடந்த 10 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சாதனை செய்ததை பார்த்திருப்பீர்கள். பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதத்தில் இருந்து வருவதை நாங்கள் தக்க வைத்து வருகிறோம். எங்கள் 10 ஆண்டுகால ஆட்சியில் 40 கோடி மக்களை, வறுமை கோட்டில் இருந்து மீட்டு எடுத்துள்ளோம். கல்வி, சுகாதாரம், சாலைகள், விமான நிலையங்கள் என நாங்கள் பல்வேறு விதங்களில் சாதனை படைத்துள்ளோம்.

தவகல் புரட்சி செய்தோம் ; தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபான்மையினர் , பெண்கள், குழந்தைகள் என பல தரப்பு மக்களின் வளர்ச்சியை காங்., ஏற்படுத்தியுள்ளது. மகளிருக்கு ரூ. 71 ஆயிரம் கோடியை கடனாக வழங்கியிருக்கின்றோம். குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்கென தனிச்சட்டம் இயற்றியுள்ளோம். தகவல் அறியும் உரிமை சட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். இந்தியாவில் எந்த மூலையில் இருப்பவரும் அரசின் தகவல் பெற முடியும். மிகப்பெரிய தவகல் புரட்சி செய்துள்ளோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி எதுவும் செய்யவில்லை என சிலர் பொய் சொல்கின்றனர். இந்தியாவில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்துள்ளோம் என பெருமையுடன் சொல்லி கொள்கிறேன்.

இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு: அரசியல் கட்சியினர் , இலங்கை தமிழர்களுக்காக எதுவும் செய்யவில்லை என்கின்றனர். காங்கிரசை விட எந்த கட்சி நன்மைகள் செய்தது என்பதை சொல்ல முடியுமா?. அருமை தலைவர் ராஜிவ் இந்த மக்களுக்காக ரத்தம் சிந்தியதை மறக்க முடியுமா ? இதை விட என்ன தியாகம் செய்ய முடியும். அவர்களுக்கு நான் சொல்வதென்னவென்றால் , யாரும் காங்., குறித்து பொய் பிரசாரம் செய்ய வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் தொடர்ந்து உதவி செய்யும், இங்கு வாழும் தமிழர்களுக்கு சாலைகள், பள்ளிக்கூடங்கள், மறுவாழ்வு மையம் அமைத்து கொடுத்துள்ளோம். அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரசை குறை கூற வேண்டாம். இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண போதிய நடவடிக்கை எடுத்துள்ளோம். மீனவர்கள் படும் துன்பம் எனக்கு தெரியும். எனது அரசு மீனவர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் இரு தரப்பு மீனவர்களை சந்தித்து பேச்சு நடத்த காங்கிரஸ்தான் முழு ஏற்பாடு செய்தது. அ.தி.மு.க,. அரசு காலதாமதம் செய்தது என்பதை பகிரங்கமாக சொல்லி கொள்கிறேன்.

மதத்தின் பெயரால் பிரித்தாளும் சூழ்ச்சி: இந்த தேர்தலில் மதவாதம், அரசியல், அதிகாரம், போன்றவை இந்தியாவுக்கு சவால் விடும் தேர்தலாக உள்ளது. இந்த நாட்டை மதத்தின் பெயரால் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடுகின்றனர். இதனால் சமூக அமைதி கெடும். இது கெடும் போது பொருளாதார, சமூக வளர்ச்சி பாதிக்கும். பா.ஜ., தனிநபரிடம் மாட்டி கொண்டிருக்கிறது. அவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த மனிதர் கையில் இந்த தேசம் போய்விடக்கூடாது என்பதை உங்களிடம் கேட்டு கொள்கிறேன். காங்., இயக்க தலைவர்கள் அன்னை இந்திரா, ராஜிவ் ஆகியோர் இந்த நாட்டிற்காக இந்தியா என்ற தத்துவத்தை காத்திட ரத்தம் சிந்தி இந்த நாட்டை காத்தனர். காங்கிரசின் தத்துவம் என்னவெனில் எல்லோருக்கும் சம உரிமையும் வளர்ச்சியும் அளிப்பதே, இது தான் இந்திய கனவு, இதற்காகத்தான் நாங்கள் ஓட்டு கேட்கிறோம். இதன் மூலம் ஒருமைப்பாட்டை நிலை நிறுத்துவோம். நமது தலைவர்களின் தியாகம் வீணாக போய்விடக்கூடாது.

தமிழகத்தில் சில பேர் காங்கிரஸ் தனித்து விடப்பட்டதாக சொல்கின்றனர். எனக்கு எதிரே இவ்வளவு தொண்டர்கள் கூடியிருக்கும் போது யாரும் நம்மை தனிமைப்படுத்த முடியாது என்று பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன். காங்கிரஸ் கொடுக்கும் வாக்குறுதிகைள நிறைவேற்றி கொடுக்கும். குமரி மக்கள் வைத்துள்ள ரயில் நிலையம், விமானநிலையம் அனைத்து பிரச்னைகளுக்கும் நாங்கள் வழி ஏற்படுத்தி கொடுப்போம். நீங்கள் தரும் ஆதரவுடன் வலுவான அரசு அமையும். இந்த தேசத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வோம். காங்கிரசுக்கு ஓட்டளியுங்கள் . இவ்வாறு சோனியா பேசினார்.

No comments:

Post a Comment