தொகுதி உலா.. அரக்கோணம்..

இந்த தொகுதி 1977ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது முதல் 2009ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு திருத்தணி, அரக்கோணம் தனி, சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, செய்யாறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது.
தொகுதி மீண்டும் மறுசீரமைப்புக்கு பின்னர் திருத்தணி, அரக்கோணம் தனி, சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. சென்னைக்கு அருகில் உள்ளதால் இந்த தொகுதி மக்கள் பெரும்பாலும் தங்கள் வாழ்வாதாரத்தை அதனை சார்ந்தே அமைத்துக் கொண்டுள்ளனர். இதனால் அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, காட்பாடி, திருத்தணி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் சென்னையின் புறநகர் பகுதிகளாகவே மாறியுள்ளன. பெரும்பாலும் ஏழை, நடுத்தர மக்களை உள்ளடக்கிய அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் மின்தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்களுக்கு மறுவாழ்வு அளிப்பதும், தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர உருப்படியான தீர்வை காண்பதும் முக்கிய தேவையாக உள்ளது.
காட்பாடியில் உள்ள தமிழ்நாடு தொழில் வெடிமருந்து நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதை தவிர்க்க, மீண்டும் நைட்ரோ கிளிசரின் வெடிமருந்து உற்பத்திக்கான அனுமதியை பெறுவதும் முக்கியமான தேவையாக உள்ளது. இத்தொகுதி விவசாயத்துக்கு அடிப்படையாக உள்ள பொன்னை ஆற்றின் குறுக்கே ஆந்திர மாநிலத்தில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை தடுத்து நிறுத்துவதும், பொன்னையுடன், ஹந்திரி நதியை இணைக்கும் திட்டத்தை விரிவாக்கம் செய்து அதை பாலாற்றுடன் கொண்டு சேர்க்கும் வகையிலான நடவடிக்கையை கேட்டு பெறுவதும் முக்கிய கோரிக்கையாக உள்ளது. அரக்கோணத்தில் ரயில்வே சார்ந்த படிப்புகளுக்கான மையத்தை ஏற்படுத்துவதும், மூடப்பட்ட அரக்கோணம் ஸ்டீல் பிளான்டை உயிரூட்டுவதும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
நெசவாளர்களுக்கான சிறப்பு திட்டங்களை ஏற்படுத்துவதும் எம்பியின் கடமையாக இருக்கக்கூடும். 1977ல் தொகுதி உருவாக்கப்பட்டது தொடங்கி நடந்த 4 நாடாளுமன்ற தேர்தல்களில் இந்த தொகுதியை காங்கிரசே தனது வசம் வைத்திருந்தது. முதல் எம்பியாக ஓ.வி.அழகேசன் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 1996ல் நடந்த தேர்தலிலும் காங்கிரசில் இருந்து தனியாக தமாகா சைக்கிள் ஓடிய போது பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவரும், பஸ் அதிபருமான ஏ.எம்.வேலு 2வது முறையாக எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.
அதன்பிறகு முதன்முறையாக 1998ல் அதிமுக இந்த தொகுதியை காங்கிரசிடம் இருந்து கைப்பற்றியது. தொடர்ந்து 1999ல் திமுக இந்த தொகுதியை கைப்பற்றியது. தற்போதைய எம்பி ஜெகத்ரட்சகன் அப்போது திமுகவின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 2004ல் பாமக சார்பில் ஆர்.வேலு எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் 2009ல் நடந்த முதல் தேர்தலில் திமுகவின் எஸ்.ஜெகத்ரட்சகன் தேர்வு செய்யப்பட்டார். அப்போது ஜெகத்ரட்சகன் 4 லட்சத்து 15 ஆயிரத்து 41 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமகவின் ஆர்.வேலு 3 லட்சத்து 52 ஆயிரத்து 245 வாக்குகளும் பெற்றனர்.
இந்நிலையில், வரும் ஏப்ரல் 24ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோவும், அதிமுக சார்பில் கோ.அரியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஜ கூட்டணியில் பாமக சார்பில் ஆர்.வேலுவும், காங்கிரஸ் சார்பில் நாசே ராஜேஷும் களத்தில் உள்ளனர். இவர்களில் அதிமுகவின் அரி, பாமகவின் வேலு ஆகியோர் பெரும்பான்மையினரான வன்னியர் வகுப்பை சேர்ந்தவர்கள். திமுக வேட்பாளர் இளங்கோ முதலியார் வகுப்பை சேர்ந்தவர். காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் யாதவ் பிரிவை சேர்ந்தவர்.
தொகுதியின் பெரும்பான்மையினராக வன்னியர் இருந்தாலும், அதிக முறை முதலியார் வகுப்பை சேர்ந்தவர்களே எம்பியாக இருந்துள்ளனர். ஆகவே, இங்கு ஜாதி அடிப்படையில் யாரும் தேர்வு செய்யப்படுவதில்லை என்பது தெரியவருகிறது. அந்த அடிப்படையில் இங்கு உண்மையான போட்டி திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களுக்கு மட்டுமே.
தற்போதைய வாக்காளர்கள் நிலவரம்
மொத்த வாக்காளர்கள் 26,44,346
ஆண்கள் 13,36,036
பெண்கள் 13,07,923
திருநங்கைகள் 387
No comments:
Post a Comment