சமீபத்தில் நடந்த தேர்தல்களில், சட்டசபை இடைத்தேர்தல்களை தவிர, மற்ற எந்தத் தேர்தலிலும், தற்போது பதிவான அளவுக்கு, கூடுதலாக ஓட்டுப் பதிவு நடக்கவில்லை. அதற்கான காரணம் குறித்து, தமிழக அரசியல் ஆய்வாளர்களில் ஒருவரான, வழக்கறிஞர் ரவீந்திரன் துரைசாமி கூறியதாவது:
40 தொகுதிகள்:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 40 லோக்சபா தொகுதிகளுக்கு நேற்று
நடந்த தேர்தலில், கிட்டத்தட்ட, 12 சதவீத ஓட்டுகள், கூடுதலாக பதிவாகி உள்ளன.
ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் போதெல்லாம், ஏதோ ஒரு மாற்றத்தை
ஏற்படுத்த வேண்டும் என்ற மனநிலையில், மக்கள் உள்ளனர் என்பதை அறிந்து
கொள்ளலாம். கடந்த, 10 ஆண்டு கால, காங்., ஆட்சியின், கொள்கை முடிவுகள்
உட்பட, அந்த அரசின் பல நடவடிக்கைகளால், மக்கள் பல விதமான சிரமத்தை
அனுபவித்தனர். அதனால், ஆட்சி மாற்றம் தேவை என, நினைத்த மக்கள்,
தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் அமைந்த கூட்டணிக்கு அதிக வரவேற்பு
அளித்தனர். அதற்கேற்ப, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியும்,
தமிழகத்துக்கு வந்து சூறாவளி சுற்றுப்பயணம் செய்தது, அந்த அணிக்கு மேலும்
வலுசேர்த்தது. அதன் தாக்கமே ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்க காரணம்.
இதன்மூலம், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மோடிக்கு ஆதரவாக, திரண்டு வந்து
ஓட்டளித்திருக்கலாம் என, நம்பலாம். அதேநேரத்தில், மோடிக்கு ஆதரவாக,
குறிப்பிட்ட சதவீத மக்கள் திரண்டு வந்து
ஓட்டளித்ததைப் போல, அவருக்கு எதிராகவும், குறிப்பிட்ட அளவினர்
திரண்டிருக்கின்றனர் என்பதையும் மறுக்க முடியாது. குறிப்பாக, மோடி
ஆட்சிக்கு வந்தால், தங்களுக்கு பின்னடைவு ஏற்படும் என, கருதும்
முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், தலித்களும் இந்த முறை
ஒருமுகப்படுத்தப்பட்டு, ஓட்டளித்திருக்கின்றனர் என, சொல்லலாம்.
ஆதரவும் எதிர்ப்பும்:
சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., முந்தைய
தேர்தல்களை விட, 10 சதவீத ஓட்டுகளை, கூடுதலாகப் பெற்று வெற்றி அடைந்தது.
அதேநேரத்தில், தோல்வியடைந்த காங்கிரசும், கூடுதலாக, 5 சதவீத ஓட்டுகளைப்
பெற்றது. இதிலிருந்தே, ஆதரவு அதிகரித்துள்ளதைப் போல, எதிர்ப்பும்
அதிகரித்துள்ளதை அறியலாம். அதுபோன்ற நிலைமைதான், தற்போது தமிழகத்திலும்
ஏற்பட்டுள்ளது. மோடிக்கு எதிரான நிலையை, கடைசி நேரத்தில், தி.மு.க.,
எடுத்ததால், அவருக்கு எதிரான ஓட்டுகள் அனைத்தையும், அந்த கூட்டணி அறுவடை
செய்திருக்க வாய்ப்பு உள்ளது. அப்படி அறுவடை செய்திருந்தால், இந்தத்
தேர்தலில், தி.மு.க., கூட்டணி அதிக இடங்களைப் பிடித்தாலும்,
ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அப்படிப்பட்ட ஒரு நிலை உருவானால்,
தி.மு.க.,வுக்கு அடுத்தபடியாக, பா.ஜ., கூட்டணி அதிக இடங்களைப் பிடிக்கலாம்.
மேலும், தமிழகத்தில், இந்த தேர்தலில், பலமுனைப் போட்டி நிலவியதால்,
அனைத்து வேட்பாளர்களும், மக்களை பெரிய அளவில் திரட்டி வந்து ஓட்டளிக்க
செய்துள்ளனர். இதுவும், ஓட்டு சதவீதம் அதிகரிக்க முக்கியமான காரணம்.
தமிழகம் முழுவதும் குடி தண்ணீர் பிரச்னை, மின் வெட்டு, பல்வேறு கட்டண
உயர்வு என, அன்றாடம் மக்கள் பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். அந்த
எதிர்ப்பு, தேர்தல் நேரங்களில் மட்டுமே, வேகமாக வெளிப்படும். அந்த
எதிர்ப்பும், ஓட்டு சதவீதம் அதிகரிக்க மற்றொரு காரணம்.
இந்து ஆதரவு நிலைப்பாடு:
இப்படி எந்த காரணத்தை கவனித்தாலும், அதனால், பெரிதும் பாதிக்கப்படுவது, அ.தி.மு.க.,வே. குறிப்பாக, இந்து ஆதரவு நிலைப்பாட்டில்,
பா.ஜ., கூட்டணி பெறும் ஓட்டுகளில், பெரும் பகுதியை இதுவரை, அ.தி.மு.க.,
தரப்பு, பெற்று வந்தது. அதை அறிந்து தான், முதல்வர் ஜெயலலிதா,
அ.தி.மு.க.,வுக்கு போடும் ஓட்டு பா.ஜ.,வுக்கு போடும் ஓட்டு என்ற, ஒரு
நிலையை ஏற்படுத்தி வைத்திருந்தார். இதை அறிந்த, பா.ஜ., தரப்பு, ஜெயலலிதாவை
கடுமையாக விமர்சித்ததோடு, மோடி மூலமாகவும் விமர்சித்ததால், அதற்கு எதிராக
ஜெயலலிதா கொதித்தெழுந்து மோடியை விமர்சித்ததும், பா.ஜ.,வுக்கு சாதகமாக
அமைந்து விட்டது.
பா.ஜ., கூட்டணி வெற்றி வாகை:
இப்போது
பதிவாகி இருக்கும், ஓட்டுப்பதிவின் அடிப்படையில் பார்த்தால், கோவை, ஈரோடு,
திருப்பூர், பொள்ளாச்சி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி,
ராமநாதபுரம், தென்சென்னை, ஆரணி, தர்மபுரி, விழுப்புரம், சேலம் என, 14
தொகுதிகளில், பா.ஜ., கூட்டணி வெற்றி வாகை சூட வாய்ப்பிருக்கிறது.
மொத்தத்தில், இந்த தேர்தல் முடிவுகள் மூலம், தமிழகத்தில் கருணாநிதி,
ஜெயலலிதாவுக்கு அடுத்த சக்தியாக, விஜயகாந்த் உருவாகி விடுவார் என,
தெரிகிறது. டில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது உட்பட, பல தவறுகளை சமீப
நாட்களில், விஜயகாந்த் செய்திருந்தாலும், பா.ஜ., கூட்டணியில் சரியான
நேரத்தில் இணைந்ததன் மூலம், அந்த தவறை அவர் சரி செய்துவிட்டார். இனி, 10
ஆண்டுகளுக்கு, தமிழகத்தில், மோடி ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்ற, இரண்டு
நிலைப்பாட்டில் தான், அரசியல் செல்லும். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment