Tuesday, 29 July 2014

காமன்வெல்த்தில் தங்கம் வென்றார் சதீஷ்குமார்: வேலூரில் பெற்றோர் மகிழ்ச்சி

காமன்வெல்த் போட்டியில், வேலூர் வீரர் சதீஷ்குமார்,23, தங்கப்பதக்கம் பெற்றார். சத்துவாச்சாரியில் உள்ள அவரது பெற்றோர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வேலூர் அடுத்த சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர் சிவலிங்கம்,65. முன்னாள் ராணுவ வீரர். வேலூர், வி.ஐ.டி. பல்கலையில், செக்யூரிட்டியாக பணிபுரிகிறார். மனைவி தெய்வானை, 50. மகன்கள் சதீஷ்குமார், 23, பிரதீப்குமார், 20.கடந்த, 1985 முதல் 2001 வரை, ராணுவத்தில் பணியாற்றிய போது ஜெபல்பூரில் நடந்த தேசிய பளு தூக்கும் போட்டியில், இரண்டு முறை பங்கேற்ற சிவலிங்கம், தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். தந்தை சிவலிங்கத்தை, ரோல் மாடலாக கொண்டு, தானும் பளு தூக்கும் வீரராக வேண்டுமென சதீஷ்குமார் நினைத்தார். சத்துவாச்சாரி அரசு உயர் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த போது, அங்குள்ள பளு தூக்கும் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.தொடர்ந்து, சத்துவாச்சாரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பளு தூக்கும் மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்ற சதீஷ்குமார், 2007ல் தேசிய அளவில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று, தங்கப்பதக்கம் பெற்றார்.

பின், மேல் விஷாரம் அப்துல் அக்கீம் கல்லூரியில், பி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்த போதே விளையாட்டு பிரிவு கோட்டாவில் இவருக்கு தென்னக ரெயில்வேயில் முதல் நிலை கிளார்க் வேலை கிடைத்தது.தென்னக ரெயில்வே அணி வீரராக, பல போட்டிகளில் சதீஷ்குமார் பங்கேற்றார். 2008ம் ஆண்டு பைக்கா போட்டி, 2009ம் ஆண்டு சப்ஜூனியர் போட்டி, 2010ல் ஜூனியர் போட்டி, 2011, 2012, 2013ம் ஆண்டுகளில் நடந்த அனைத்து பளு தூக்கும் போட்டிகளிலும் பங்கேற்ற சதீஷ்குமார், தங்கப்பதக்கம் பெற்றார்.தற்போது, ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டி நடந்து வருகிறது. இதில், நேற்று முன்தினம் இரவு, நடந்த ஆடவர் பளு தூக்கும் போட்டியில், ஸ்னாட்ச் பிரிவில், 149 கிலோ எடையையும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில், 179 கிலோ எடையையும் தூக்கி, மொத்தமாக, 328 கிலோ எடை தூக்கி, தங்கப்பதக்கம் வென்றார். ஸ்னாட்ச் பிரிவில், 149 கிலோ எடை தூக்கியதன் மூலம் சதீஷ்குமார், புதிய உலக சாதனையை படைத்தார். இந்தியாவுக்கு, ஆறாவது தங்க பதக்கத்தை, சதீஷ்குமார் பெற்று தந்து, வேலூர் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இதுகுறித்து, சதீஷ்குமாரின் தந்தை சிவலிங்கம் கூறியதாவது:எட்டு ஆண்டுகளாக பெற்ற கடும் பயிற்சியால் தான் காமன்வெல்த் போட்டியில் சதீஷ்குமார் தங்கப்பதக்கம் பெற முடிந்தது. கடந்த மாதம் பாட்டியாலாவில் நடந்த தேர்வு போட்டியில் வெற்றி பெற்று காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் இந்திய பளு தூக்கும் அணியில் இடம் பிடித்தார்.இந்திய விளையாட்டு ஆணையத்தால் காமன்வெல்த் போட்டி துவங்கும் முன், இங்கிலாந்துக்கு சென்று அங்கு பயிற்சி பெற்று வந்தார். வரும் அக்டோபர் மாதம் தென் கொரியாவில் நடக்க உள்ள பளு தூக்கும் போட்டியில் பங்கேற்க உள்ளார். என் மகன் இந்தியாவுக்காக பளுதூக்கி தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
Click Here

No comments:

Post a Comment