Tuesday, 29 July 2014

திருமணம் எனும் நிக்காஹ

ஒரு படத்தின் கதையை ஒரு வரியில் சொல்லக் கூடியதாக இருந்தாலும், அதன் திரைக்கதையை விரிவாக சொல்ல முடியாத அளவிற்கு பல திருப்பங்களுடன் இருந்தால் அந்த படத்தின் வெற்றி ஓரளவிற்கு உறுதி செய்யப்பட்டு விடும். ஆனால், அந்த திரைக்கதையை படம் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ளவே முடியாத அளவிற்கு இருந்தால் என்ன செய்ய முடியும்.
ஒரு பிராமணப் பையனும், பிராமணப் பெண்ணும், ரயில் பயணத்தில் முஸ்லிம் பெயரில் பயணிக்கும் போது காதல் வயப்படுகிறார்கள். இருவரும் ஒருவரையொருவர் முஸ்லிம் என நினைத்து காதலைத் தொடர, அவர்கள் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் கிளைமாக்ஸ், இதுதான் இந்தப் படத்தின் ஒரு வரிக் கதை. இதை எப்படிப்பட்ட சுவாரசியத்துடனும், திருப்பங்களுடனும் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அதை செய்யத் தவறிவிட்டார் அறிமுக இயக்குனர் அனிஸ்.
நல்ல தயாரிப்பாளர், நல்ல நட்சத்திரங்கள் கிடைத்தும் திரைக்கதை வலுவாக இல்லாததால் இந்த 'திருமணம் எனும் நிக்காஹ்' திக்கித் திணறி திண்டாடுகிறது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் பட்டியலில் அனிஸும் இடம் பெற்று விட்டார்.

பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த ஜெய், ரயிலில் டிக்கட் கிடைக்காத காரணத்தால் பிளாக்கில் அபுபக்கர் என்ற பெயரில் டிக்கட் வாங்கிப் பயணிக்கிறார். பிராமண குடும்பத்தைச் சேர்ந்த நஸ்ரியா, கம்பெனி வேலையாக ஆயிஷா என்ற முஸ்லிம் தோழி செல்ல முடியாத காரணத்தால் ஆயிஷா என்ற பெயரில் பயணிக்கிறார். அப்போது சக பயணி ஒருவரால் நஸ்ரியா தூங்கும் போது வீடியோ எடுக்க, அதைத் தடுத்து அந்த பயணியை போலீசிடம் மாட்ட வைக்கிறார் ஜெய். பின்னர் இருவரும் சென்னை திரும்பியதும் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள். ஜெய் தன்னை அபுபக்கர் என்ற முஸ்லிமாகவே காட்டிக் கொள்ள, நஸ்ரியா, ஆயிஷா என்ற முஸ்லிமாகவே காட்டிக் கொள்ள காதல் நாடகம் ஆடுகிறார்கள். ஜெய், நஸ்ரியாவைக் காதலிக்க ஆரம்பிக்க, ஒரு கட்டத்தில் நஸ்ரியா தனக்கு காதலில் விருப்பமில்லை என்கிறார். பின்னர், தனக்குள்ளும் காதல் இருப்பதை உணர்ந்து ஜெய்யைக் காதலிக்கிறார்.

ஒரு சந்தர்ப்பத்தில் இருவருக்கும் மற்றவர் முஸ்லிம் அல்ல, பிராமணர் என்ற உண்மைத் தெரியவர வீட்டில் காதலைத் தெரியப்படுத்துகிறார்கள். குடும்பத்தினர் அவர்களிருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்க, ஏதோ ஒரு குற்ற உணர்வால் திருமணத்தன்று இருவருமே சேர்ந்து முடிவெடுத்து திருமணத்தை நிறுத்தி விடுகிறார்கள், பிரிந்தும் விடுகிறார்கள். அதன் பின் ஜெய், நஸ்ரியா ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை. அட...இரண்டாவது பாதி கதையை கரெக்டாதான் சொல்லிட்டமா ? நாம சொன்னதுதான் சரியா, இல்லை இயக்குனர் வேற ஏதாவது நினைத்திருந்தாரா என்பது அவருக்குத்தான் வெளிச்சம். இடைவேளைக்குப் பிறகு அவ்வளவு குழப்பமான புரியாத அளவிலான திரைக்கதை.

ஜெய், அப்படியே வந்து போகிறார். ஆரம்பக் காட்சியில் நஸ்ரியாவைப் பார்த்ததும் கொஞ்சம் ஆச்சரியப்பட்டு நடிக்கிறார், அவ்வளவுதான். அதன் பின் தான் விஜயராகவாச்சாரி, அபுபக்கர் என்ற இரண்டு விதமான நடிப்பைத் தொடர வேண்டிய ஒரு சூழ்நிலை. இரண்டுக்கும் பெரிதாக வித்தியாசம் காட்ட வேண்டும் என்றெல்லாம் அவர் முயற்சிக்கவில்லை. கொஞ்சம் அப்பாவித்தனத்துடனும், பயந்த சுபாவத்துடனும் அதே 'எங்கேயும் எப்போதும்' பார்த்த நடிப்பையே வெளிப்படுத்துகிறார். கொஞ்சம் மாத்தி ட்ரை பண்ணுங்க பாஸ்.

இந்தப் படத்தில் நடித்த ராசியோ என்னமோ நஸ்ரியா, சீக்கிரமே கல்யாணம் ஆகிப் போகப் போறாங்க. விஷ்ணு ப்ரியா என்ற உண்மையான கதாபாத்திரப் பெயரை விட, ஆயிஷா என்ற பெயரில் மனதில் இடம் பிடித்து விடுகிறார். ஆனாலும், ஒரு குழப்பமான கதாபாத்திரத்தையே உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். இவர் எப்போது ஜெய்யைக் காதலிக்க ஆரம்பிக்கிறார், எதற்காக வேண்டாமென்று விலகிச் செல்கிறார், திரும்பவும் எங்கோ ஒரு இடத்தில் 'அபுபக்கர்' என்ற பெயரைக் கேட்டதுமே தனக்குள்ளும் அவர் மீது காதல் இருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறாரா என்பதெல்லாம் சரியாக விளங்கவில்லை. ரசிகர்கள் எதிர்பார்க்கும் துறு துறு நஸ்ரியாவில் பாதிதான் இந்தப் படத்தில் இருக்கிறார்.

சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் ஹெப்பா பட்டேல் அதிகமாகவே ஈர்க்கிறார். அதிக வசனங்கள் இல்லை, அதிக காட்சிகள் இல்லை, ஆனாலும் பார்வையாலேயே வீசும் அந்தக் காதல் பார்வை கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. அடுத்த படத்திலாவது முழு கதாநாயகியாக ஜொலிக்கட்டும்.

மற்ற கதாபாத்திரத் தேர்வுகளில் யதார்த்தமான முகங்கள் நிறையவே உள்ளது. குறிப்பாக ஜெய், நஸ்ரியா இருவரது குடும்பத்தார்களும், ஹெப்பா பட்டேல் அப்பாவாக நடித்திருப்பருவம் அப்படியே பிராமண, முஸ்லிம் குடும்பத்தினரை கண்முன் நிறுத்தியிருக்கிறார்கள். படத்தில் நகைச்சுவைக் கதாபாத்திரம் என்று தனியாக யாருமேயில்லை. நகைச்சுவை இல்லாததும் குறையாகவே உள்ளது.

கொஞ்சம் தடுக்கி விழுந்தாலும் படத்தில் பாடல்களைப் போட்டு விடுவார்கள் போல. எத்தனை பாடல்கள் என கணக்கு வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு பாடல்கள் வந்து போகின்றன. 'கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்' பாடலும், படமாக்கிய விதமும் அருமை.

'திருமணம் எனும் நிக்காஹ்' - சைவ விருந்தும் இல்லை, அசைவ விருந்தும் இல்லை...!!

வேலையில்லா பட்டதாரி

வேலையில்லா பட்டதாரி

  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : அமலா பால்
  • இயக்குனர் :வேல்ராஜ்


நம் நாட்டில் படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் பிரச்னைகளைப் பற்றி அவ்வப்போது படங்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன. சில படங்கள் மிகைப்படுத்தப்பட்ட கற்பனையாகவும், சில படங்கள் யதார்த்தமான படங்களாகவும் வந்திருக்கின்றன. படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் பிரச்னைகள் ஒரே மாதிரி இருப்பதில்லை. வாழ்க்கையின் முக்கியமான அடுத்த கட்டத்தில் காலடி எடுத்து வைத்து நன்றாக சம்பாதித்து, கல்யாணம், குடும்பம், குழந்தை என அவன் சிறகடிக்க ஆசைப்படும் நேரத்தில் அவன் பறப்பதை தடுக்கவும், அவனின் சிறகுகளை உடைத்தெறியவும் பல பேர் காத்துக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு இளைஞனின் வாழ்க்கையைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வேல்ராஜ்.

பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய வேல்ராஜ் முதல் முறையாக இயக்கியிருக்கும் படம். ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக வெற்றி பெறும் இயக்குனர்களின் வரிசையில் இவரும் இடம் பிடித்துவிடுவார். தனுஷை ரசிகர்கள் எப்படிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார்களோ அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தையும், அவருக்குப் பொருத்தமான கதையையும், காட்சிகளையும் உருவாக்கியிருக்கிறார். அதுவே அவருக்கு பாதி வெற்றியைக் கொடுத்துவிட்டது. ஒரு நடுத்தரக் குடும்பத்து யதார்த்த வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். இடைவேளை வரை யதார்த்த சினிமாவாக இருக்கும் படம், அதன் பின் கமர்ஷியல் பாதையை நோக்கி நகர்கிறது. அதிலும் யதார்த்தம் இருந்தாலும், சினிமாத்தனம் கொஞ்சம் அதிகம்தான். அதைக் கொஞ்சம் குறைத்திருந்தால் இரண்டாவது பாதியும் இன்னும் அதிகமாக ஈர்த்திருக்கும்.

ஒரு நடுத்தரக் குடும்பத்து வீட்டின் மூத்த மகன் தனுஷ். சிவில் இஞ்சினியரிங் படித்து முடித்து விட்டு நல்ல வேலைக்காக அலைந்து கொண்டிருக்கிறார். ஆனால், அவருடைய தம்பி நல்ல வேலையில் இருக்கிறார். வீட்டில் அப்பா சமுத்திரக்கனி எப்போதும் திட்டிக் கொண்டேயிருக்க, எல்லா அம்மா போலவே தனுஷின் அம்மா சரண்யா மகனுக்கு ஆதரவாக இருக்கிறார். பக்கத்து வீட்டிற்கு குடி வரும் அமலாபாலுடன் பழக ஆரம்பித்து போகப் போக அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார் தனுஷ். ஒரு சந்தர்ப்பத்தில் சரண்யா திடீரென இறந்துவிட, அதற்கு தனுஷும் ஒரு காரணம் என அப்பாவும், தம்பியும் தனுஷை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள். அதன் பின் இறந்து போன சரண்யாவின் நுரையீரல் தானத்தால் புது வாழ்வு பெறும் சுரபியின் அப்பா மூலமாக அவர்களது கான்ட்ராக்ட் கம்பெனியில் தனுஷுக்கு வேலை கிடைக்கிறது. 200 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிடம் கட்டும் அரசாங்க திட்டத்திற்கு பொறுப்பேற்கிறார் தனுஷ். ஆனால், போட்டி நிறுவனம் அந்த திட்டத்தை நிறைவேற்றாமல் தடுக்கும் முயற்சியில் இறங்குகிறது. அவற்றை தனுஷ் சமாளிக்கிறாரா, அவரது குடும்பத்தினரின் அன்பை சம்பாதிக்கிறாரா, அமலாவுடனான காதல் நிறைவேறுகிறதா என்பதுதான் படத்தின் மீதி கதை.

“தேவதையைக் கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், யாரடி நீ மோகினி” பாதைக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார் தனுஷ். இம்மாதிரியான படங்களும், கதாபாத்திரங்களையும்தான் அவரிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை இந்தப் படம் தனுஷுக்கு நன்றாகவே உணர்த்தும். இந்த மாதிரி படங்களும், கதாபாத்திரமும் அவருக்கு 'லட்டு' மாதிரி, நடிக்கிறதப் பத்தி கேட்கணுமா. ஆனால், அவ்வப்போது ரஜினிகாந்த் ஏன் எட்டிப் பார்க்கிறார் என்றுதான் தெரியவில்லை. பல காட்சிகளில் ரஜினியின் மேனரிசத்தைப் பார்க்க முடிகிறது. நீங்க நீங்களாவே இருப்பதுதான் நல்லது தனுஷ். பல காட்சிகளில் தனுஷ் பேசும் வசனத்திற்கு தியேட்டரில் கைதட்டல். அவ்வளவு பேர் அவரை மாதிரியே இருப்பாங்க போல. முக்கவால் வாசி காட்சிகளில் புகைப் பிடித்துக் கொண்டிருப்பது ஏனோ. ஒரு காட்சியில் சுரபிக்கு புகைபிடிப்பது பற்றி அட்வைஸ் கொடுத்துவிட்டு, அதன் பின் இவர்தான் அதிகமாக புகைபிடிக்கிறார். வேலையில்லாத பட்டதாரிகளில் புகை பிடிக்காத பல லட்சம் பேர் இருக்கிறார்கள்.

தனுஷ் காதலியாக அமலாபால். பல் டாக்டர் கதாபாத்திரம், எந்த ஊர்ல பல் டாக்டருக்கு மாதம் 2 லட்ச ரூபாய் சம்பளம் தருகிறார்கள்?. சும்மா பெருமைக்காக வைத்த வசனமா, இல்லை சீரியசாகவே இந்த வசனத்தை வைத்தார்களா தெரியவில்லை. தனுஷ் சொல்ற மாதிரி 'சினிமா நடிகை மாதிரி இல்லைன்னாலும், சீரியல் நடிகை மாதிரிதான்' அமலா பால் தெரிகிறார். அடிக்கடி தனுஷுக்கு அட்வைஸ் மழை பொழிந்து அவரை மாற்ற முயற்சிக்கிறார். ஆனால், அமலா பால் முகத்தில் ஒரு சோகம் குடி கொண்டிருக்கிறதே. ஒரு வேளை இந்தப் படத்தில் நடிக்கும் போதுதான் திருமணம் பற்றி முடிவெடுத்திருப்பாரோ? இதற்குப் பிறகு நடிக்க மாட்டோமா என்ற கவலை வந்து விட்டது போல.

அமலா பாலுக்கு அப்படியே கான்டிராஸ்டாக சுரபி. எப்போதும் பளிச்சென இருக்கிறார். அவரைக் காட்டும் போதெல்லாம் ஒளிப்பதிவாளர் ஸ்பெஷல் லென்ஸ் போட்டு எடுத்திருப்பார் போல. சில காட்சிகளில் வந்து போகும் கதாபாத்திரத்திம்தான் என்றாலும் தன் அழகால் கவனத்தை ஈர்க்கிறார் சுரபி. ஆனால், இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்தால், அதையே நம் இயக்குனர் வழக்கமாக்கிவிடுவார்கள் என்பதை யாராவது அவருக்குச் சொல்லியாக வேண்டும்.

தனுஷின் அப்பாவாக சமுத்திரக்கனி, நடுத்தரக் குடும்பத்து அப்பாவை கண்முன் நிறுத்துகிறார். ஒரு காலத்துல நாமும் அப்படித்தானே திட்டு வாங்கியிருக்கிறோம், இப்பவும் திட்டு வாங்குகிறோம் என பல இளைஞர்களை யோசிக்க வைக்கும்.

அம்மான்னா சரண்யாதான், சரண்யான்னா அம்மாதான். இப்படிப்பட்ட அம்மாக்களால்தான் பல இளைஞர்கள் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். படத்தில் சரண்யாவின் முடிவு கண்ணீரை வரவழைக்கும் காட்சி. அந்த சோகப் பாடல் வேறு இன்னும் மனதை அழுத்தி விடுகிறது.

தனுஷின் தம்பியாக நடித்திருக்கும் புதுமுகம் அருமையான தேர்வு. வில்லனாக அமித்தேஷ், பணக்காரத் தோரணயை அழகாக காட்டியிருக்கிறார்.

இன்றைய இளைஞர்களின் ரசனைக்கேற்ப பாடல்களைப் போட்டிருக்கிறார் அனிருத். படத்தின் கதையை மீறி கொஞ்சம் மாடர்ன் ஆன இசையாக இருக்கிறது, அம்மா பாடலைத் தவிர.

வேலையில்லா பட்டதாரி - வேலைக்குப் போன பட்டதாரியை விட வேலையில்லாத பட்டதாரிதான் அதிகமா ரசிக்க வைக்கிறார்.

காமன்வெல்த்தில் தங்கம் வென்றார் சதீஷ்குமார்: வேலூரில் பெற்றோர் மகிழ்ச்சி

காமன்வெல்த் போட்டியில், வேலூர் வீரர் சதீஷ்குமார்,23, தங்கப்பதக்கம் பெற்றார். சத்துவாச்சாரியில் உள்ள அவரது பெற்றோர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வேலூர் அடுத்த சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர் சிவலிங்கம்,65. முன்னாள் ராணுவ வீரர். வேலூர், வி.ஐ.டி. பல்கலையில், செக்யூரிட்டியாக பணிபுரிகிறார். மனைவி தெய்வானை, 50. மகன்கள் சதீஷ்குமார், 23, பிரதீப்குமார், 20.கடந்த, 1985 முதல் 2001 வரை, ராணுவத்தில் பணியாற்றிய போது ஜெபல்பூரில் நடந்த தேசிய பளு தூக்கும் போட்டியில், இரண்டு முறை பங்கேற்ற சிவலிங்கம், தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். தந்தை சிவலிங்கத்தை, ரோல் மாடலாக கொண்டு, தானும் பளு தூக்கும் வீரராக வேண்டுமென சதீஷ்குமார் நினைத்தார். சத்துவாச்சாரி அரசு உயர் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த போது, அங்குள்ள பளு தூக்கும் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.தொடர்ந்து, சத்துவாச்சாரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பளு தூக்கும் மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்ற சதீஷ்குமார், 2007ல் தேசிய அளவில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று, தங்கப்பதக்கம் பெற்றார்.

பின், மேல் விஷாரம் அப்துல் அக்கீம் கல்லூரியில், பி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்த போதே விளையாட்டு பிரிவு கோட்டாவில் இவருக்கு தென்னக ரெயில்வேயில் முதல் நிலை கிளார்க் வேலை கிடைத்தது.தென்னக ரெயில்வே அணி வீரராக, பல போட்டிகளில் சதீஷ்குமார் பங்கேற்றார். 2008ம் ஆண்டு பைக்கா போட்டி, 2009ம் ஆண்டு சப்ஜூனியர் போட்டி, 2010ல் ஜூனியர் போட்டி, 2011, 2012, 2013ம் ஆண்டுகளில் நடந்த அனைத்து பளு தூக்கும் போட்டிகளிலும் பங்கேற்ற சதீஷ்குமார், தங்கப்பதக்கம் பெற்றார்.தற்போது, ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டி நடந்து வருகிறது. இதில், நேற்று முன்தினம் இரவு, நடந்த ஆடவர் பளு தூக்கும் போட்டியில், ஸ்னாட்ச் பிரிவில், 149 கிலோ எடையையும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில், 179 கிலோ எடையையும் தூக்கி, மொத்தமாக, 328 கிலோ எடை தூக்கி, தங்கப்பதக்கம் வென்றார். ஸ்னாட்ச் பிரிவில், 149 கிலோ எடை தூக்கியதன் மூலம் சதீஷ்குமார், புதிய உலக சாதனையை படைத்தார். இந்தியாவுக்கு, ஆறாவது தங்க பதக்கத்தை, சதீஷ்குமார் பெற்று தந்து, வேலூர் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இதுகுறித்து, சதீஷ்குமாரின் தந்தை சிவலிங்கம் கூறியதாவது:எட்டு ஆண்டுகளாக பெற்ற கடும் பயிற்சியால் தான் காமன்வெல்த் போட்டியில் சதீஷ்குமார் தங்கப்பதக்கம் பெற முடிந்தது. கடந்த மாதம் பாட்டியாலாவில் நடந்த தேர்வு போட்டியில் வெற்றி பெற்று காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் இந்திய பளு தூக்கும் அணியில் இடம் பிடித்தார்.இந்திய விளையாட்டு ஆணையத்தால் காமன்வெல்த் போட்டி துவங்கும் முன், இங்கிலாந்துக்கு சென்று அங்கு பயிற்சி பெற்று வந்தார். வரும் அக்டோபர் மாதம் தென் கொரியாவில் நடக்க உள்ள பளு தூக்கும் போட்டியில் பங்கேற்க உள்ளார். என் மகன் இந்தியாவுக்காக பளுதூக்கி தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
Click Here

Sunday, 20 July 2014

ஓவியமா? இல்லை காவியமா?

கோவை நண்பர் விஜயகுமார் ஒரு அழகான ஓவியத்தை தனது முகநூலில் பதிவிட்டு இருந்தார்.பார்த்த உடனேயே இது ஒரு புகைப்படமோ என நினைக்கத்தோன்றும் வகையில் தத்ரூபமாக அந்த ஓவியம் அமைந்திருந்தது. ஓவியம் வரைந்தவர் யார் என்பது தெரிந்தால் அவரை படத்துடன் கவுரப்படுத்தாலாமே என விசாரித்தேன்கள்ளம் கபடமில்லாத ஒரு அழகான கிராமத்து பெண்ணை கொண்டுவந்து நிறுத்தியது அந்த ஓவியத்தில் ஏற்பட்ட ஈர்ப்பு, அதன் மேலான லயிப்பு காரணமாக படத்தை பகிர்ந்து கொண்டேன்; (ஷேர்) அதைத்தாண்டி வேறு எதுவும் தெரியவில்லை என்றார் நண்பர்.


வாசகர்கள் கண்டு பிடித்த ஓவியர்:

இன்னும் கொஞ்சம் தேடலை ஆழப்படுத்தியபோது ஓவியர் பற்றிய விவரங்கள் கிடைத்தது.(விவரங்கள் கொடுத்து உதவிய வாசகர்களுக்கு மிகவும் நன்றி.)
எஸ்.இளையராஜா என்ற அந்த இளம் ஓவியர் சென்னை கீழ்ப்பாக்கம் கார்டனை சேர்ந்தவர். ஆயில் பெயின்ட், வாட்டர் கலர், மற்றும் அக்ரிலிக்கில் ஓவியம் வரைவதில் இவர் சிறந்தவர். ஓவியம் வரைவதற்கு அவர் என்ன பாணியை கடைபிடிக்கிறார் என்பதைவிட ஓவியங்களில் உள்ள பெண்களிடம் காட்டிய கண்ணியம், அழகு ஆகியவைதான் கவித்துவம் பெறுகின்றன. மிகப்பெரிய புகழை இந்த ஓவியர் நிச்சயம் அடைவார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை, அதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரது தொடர்பு எண்: 9841170866.
ஓவியங்களில் கிராமத்து மண் மணம் மணக்கிறது, வெள்ளந்தியான பெண்களின் இயல்பான அழகுடன் காணப்படுகின்றனர். குடிசை வீடுகளும் வீடுகளுக்குள் காணப்படும் விறகு அடுப்பும், அதன் மீது விழும் வெளிச்ச கோடுகளும் அழகோ அழகு.அழுத்தந்திருத்தமான வண்ணங்களுடன் அமைந்துள்ள இந்த ஓவியங்களை இன்றெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கலாம்.
இயற்கையோடு இணைந்த பொற்காலம்:

பாஸ் பண்ணுவதற்கு மட்டும் கொஞ்சமாய் படித்து, நிறைய விளையாடி, தண்ணீர் சேருமோ சேராதோ என்ற சந்தேகம் இல்லாமல் கிடைத்த தண்ணீரை தாகம் தீரகுடித்து, கலோரி பார்க்காமல் சாப்பிட்டு,அது செரிக்க செரிக்க சிரிக்க சிரிக்க பேசி, படுத்தவுடன் தூங்கி, சைக்கிளோடு உறவாடி, பாண்டி, கபடி என விளையாடி இனிமையாக இயற்கையோடு இணைந்து வாழ்ந்த பொற்காலத்திற்கே இந்த ஓவியங்கள் இழுத்துச்செல்வது மட்டும் நிஜம்










Thursday, 10 July 2014

ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரர் திருக்கோயில்.திமிரி


விஜயநகரப் பேரரசின் வரலாற்றில் திம்மிரெட்டி பொம்மிரெட்டி வேலூர் கோட்டையை தலைமை இடமாகக் கொண்டு குருநில மன்னர்களாக நிர்வாகித்த காலம் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களின் வழித்தோன்றலான சதாசிவராய மன்னர் ஆற்காட்டை அடுத்த திவாகராயர் எல்லை (திமிரி) பகுதியில் பல நற்காரியங்கள் புரிந்தார்.






ஒரு சமயம் தொற்றுநோய் விஷகிருமிகளால் மக்கள் நோய்களுக்கு ஆளாகி அவதியுற்றனர். இரக்க குணமும் இறைபற்றும் மிக்க சதாசிவராயர் இதனைகண்டு வேதனையுற்றார். உடனடியாக தமது அமைச்சரவையைக் கூட்டி ஆலோசித்தார். பின்னர் தமது ராஜவைத்தியரான ராச பண்டித சிரோன்மணி மந்திரவைத்திய கேசரி என்று புகழப்பட்ட கன்னிகா பரமேஸ்வரர் அந்தனரிடம் மக்கள் நோய்களை தீர்க்கும் உபாயத்தை விவாதித்தார்.

மன்னரின் அன்பான ஆணைப்படி அந்த ராஜவைத்தியர் தன்வந்ரி முறையில் சந்திரபாஷானம் எனப்படும் திமிரி பாஷாணம் உள்ளிட்ட ஐந்து பாஷாணங்களை கட்டென ஆக்கி தெயவாம்சமும் மருத்துவ குணமும் இரண்டறக் கலந்த சோமநாத ஈஸ்வர பாஷாண லிங்கத்தை வடிவமைத்துத் தந்தருளினார்.

ஆற்காட்டியிலிருந்து தெற்கே 8 k.m

ஆரணியிளிருந்து வடக்கே 18. k.m

பேருந்து நிறுத்தம் : திமிரி

( திமிரி மார்கெட் வழியாக திமிரி கோட்டையிலுள்ள இவ்வாலயத்தை அடையலாம் )



இதன் உயரம் ஆறு அங்குலம் மட்டுமே என்பது குறிப்பிடதகத்து.

கி பி 1379 ஆம் ஆண்டு தை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் திமிரி நகரின் கோட்டையில் அப்போதைய சிருங்கேரி மடத்தின் 12வது சங்கராச்சாரியார் ஸ்ரீ வித்யாரன்ய சுவாமிகளின் ஆசிர்வாதத்துடன் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஆகம முறைப்படியும் சித்த மருத்துவ முறைப்படியும் சீரும் சிறப்புமாக அமையப்பெற்ற இந்த பாஷாண லிங்கம் பக்தர்களுக்கு அருள்விருந்தை வழங்கியது! அதன் மருத்துவ குணங்கள் மிகுந்த அபிஷேக தீர்த்தம் அருமருந்தாய் விளங்கியது!!.

அதுவரை திவாகராயர் எல்லை என்று அழைகப்பட்ட அப்பகுதி திமிரி பாஷாண லிங்கத்தின் பெருமையால் திமிரி நகரம் என்று பெயர் மாற்றம் கொண்டது!.

மக்கள் பிணிதீர்த்து மகிழ்வதைக் கண்ட சதாசிவராயர் பெருமகிழ்ச்சியடைந்தார். பக்திப் பரவசத்தில் நெகிழ்ந்தார்.

சோதனைகள் மானுடர்களுக்கு மட்டுமல்ல கடவுள்களுக்கும் சிலசமயம் ஏற்படுவதுண்டு. அதிலும் குறிப்பாக மக்கள் குறைபோக்கி தர்மத்தை நிலைநாட்ட மண்ணில் அவதாரமெடுக்கும் எல்லா தெய்வங்களுக்கும் இடர்பாடு வந்ததாய் புராணங்கள் கூறுகின்றன.

ஆற்காடு நவாப் படையெடுப்பின் போது வேலூர் கோட்டையும் திமிரி கோட்டையும் பிடிபட்டது - இடிபட்டது !.

இந்தியாவின் புராதன சின்னங்களையும் விலைமதிப்பில்லா பொருட்களையும் கொள்ளையடிக்க வேண்டும் என்பது முகலாயப் படையினரின் இரண்டாவது குறிக்கோள். அந்த கொள்ளையரிடமிருந்து திமிரி பாஷாண லிங்கத்தை பாதுகாக்கும் பொருட்டு வேதியல் கலவையிலான கூர்ம வடிவ கூட்டுக்குள் மறைத்து திமிரி சோமநாத ஈஸ்வரர் கோவிலின் நீர்நிரம்பிய குளத்தில் புதைத்துவைதனர் .

1985 ஆம் ஆண்டில் திமிரி நகரில் ஐயப்பன் கோவில் நிர்மானபணி நடந்தது. இப்பணி ஒரு காலகட்டத்தில் தடைபட்டு நின்றது. இந்தப்பணியில் ஏதேனும் தெய்வகுற்றம் நிகழந்துவிட்டதோ என ஐயமுற்ற திமிரி ஐயப்பன் நற்பணி மன்ற நிர்வாகி திரு A.S.இராதாகிருஷ்ணன் அவர்கள் அகத்தியர் நாடிசோதிடரை நாடினார்.


நாடிசோதிடர் (ஜே.ஹரி) திருA.S.இராதாகிருஷ்ணன்(முற்பிறவி கன்னிகாபரமேஸ்வரர்) அவர்களின் லட்சியப்பாதையை தெளிவாகக் காட்டினார் - ஆன்மிக வாழ்க்கையை விரிவாகக் கூறினார். அகத்தியர் நாடியில் திமிரி சோமநாத ஈஸ்வரர் ஆலய குளத்தில் புதையுண்ட “பாஷாண லிங்கம்” பற்றி செய்தி வந்தது!.

அந்த பாஷாண லிங்கம் தனது முயற்சியால் அகழ்ந்தெடுக்கப்பட்டு தன்னுடைய கரங்களால் மீண்டும் பிரதிஷ்டை செயப்படும் என்ற குறிப்பைக் கேட்ட திரு A.S.இராதாகிருஷ்ணன் சுவாமிகள் (முற்பிறவி கன்னிகாபரமேஸ்வரர்) சிவனின்பால் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி மெய்சிலிர்ந்து அகமகிழ்ந்தார்.

பெருமுயற்சிகொண்டு குளத்தில் புதையுண்ட அந்த அபூர்வ லிங்கத்தைத் தேடினார். ஊரே திரண்டு வந்து வேடிக்கைபார்த்தது - பலவிதமாய் விமர்சனம் செய்தது. 1985 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அந்த அதிசயம் நிகழ்ந்தது!. நம்பிக்கையுடன் தேடிய திரு A.S.இராதாகிருஷ்ணன் சுவாமிகள் அவர்களுக்கு குளத்தில் சுமார் 600 ஆண்டுகளாக புதையுண்டுகிடந்த திமிரி பாஷாண லிங்கம் கிடைத்தது!.

திரு A.S.இராதாகிருஷ்ணன் சுவாமிகள் அவர்களுக்கு தனது தர்மகர்மா யோகத்தால் பூர்வ ஜென்ம பலனாக தன்னிடம் கிடைத்த அந்த அபூர்வ திமிரி பாஷாண லிங்கத்தை இதுநாள்வரை தன் கண்ணின் மணிபோல் காத்துவருகிறார். இந்த லிங்கத்திற்கு ஓலைச்சுவடிகளில் கூறிய முறைப்படி இன்று வரை அவராகவே அபிஷேக ஆராதனைகள் செய்து வருகிறார்.

இந்த லிங்கம் தற்போது நன்னீர் நிரப்பப்பட்ட கண்ணாடி லிங்க வடிவிலான குடுவையில் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.

அதிசயம்மிக்க இந்த திமிரி பாஷாண லிங்கத்தின் பேரருள் உலகமெங்கும் உள்ள பக்தர்களை சென்று சேரும் வகையில் திமிரி நகரின் கோட்டையில் தற்போது ஆகமவிதிப்படி அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் திருகோயில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் திமிரி பாஷாண லிங்க திருகோயில் இந்தியாவில் உள்ள சைவத் திருத்தலங்களில் சிறந்து விளங்கபோவது திண்ணம்!.



நவபாஷாணம் பற்றி பல வித கருத்து நிலவுகின்றது .., பல இடங்களில் நவபாஷாணம் சிலையை போகர் செய்து மறைத்து வைதிருக்கிறார் . தக்க காலத்தில் வெளிவரும் என்றெல்லாம் பலர் கூறுகின்றனர் .., பூம்பாறை கோயிலில் இருப்பது நவபாஷாணம் என்றும் ..., புதுக்கோட்டையில் ஒரு பைரவர் சிலை நவபாஷாணத்தால் ஆனது ஆனால் மச்சம் குறைவு அதனால் விஷயமாகி விட்டது என்றும் கூறுகின்றனர் .. இதுக்கும் மேல் சில வைத்தியர்கள் மற்றும் சித்தர்கள் அருள் பெற்றவர்கள் என்று கூறிக்கொள்வோர் தங்களிடம் நவபாஷாணம் சிலை உள்ளது .., தாங்களால் நவபாஷாண சிலை செய்யமுடியும் என்று கூறுகின்ற கூத்துக்கு அளவே இல்லை ...




அப்படி அவை எல்லாம் நவபாஷாணமானாக இருந்திருந்தால் அவற்றின் நிலையே வேறு அனைத்தும் ஆய்வு கூடத்தில் தான் இருந்திருக்கும் அல்லது முழுக்க முழுக்க அரசாங்க கட்டுபாட்டில் வந்திருக்கும்


"உண்மையில் பழனியம்பதியில் இருப்பது மட்டும் தான் நவபாஷாணம் . மற்றவை எதுவும் நவபாஷாணம் அல்ல அல்ல அல்லவே அல்ல !!.அதே போல் போகர் இன்னொன்றை ஆங்காங்கே மறைத்து வைத்திருக்கிறார் என்பதும் உண்மையல்ல ... போகர் பெருமான் தமக்கு உதவியாக இருந்த புலிப்பாணிக்காக ஆள் காட்டி விரல் அளவு ஒரு நவபாஷாண முருகன் சிலையை தந்திருக்கிறார் அது மட்டும் தற்போது பழனியம்பதியில் மறைந்து இருக்கிறது . அதுவும் தற்போதைய கால கட்ட சுழலில் வெளி வருவதற்கு வாய்ப்பே இல்லை .,திமிரியில் இருப்பதும் பஞ்சபாஷாணமே . ". இது அகத்தியர் ஜீவ நாடியில் கூறிய வாக்கு ... இந்த பேருண்மையை எடுத்துக் கொள்வது அவரவர் விருப்பம் அஃதே .



ஆனால் "திமிரியில் இருப்பதும் பஞ்சபாஷாணமே" என்று அகத்தியம் பெருமான் கூறினார் அல்லவா! அது பற்றி பார்ப்போம் தற்போது வேலூரில் திமிரி எனுமிடத்தில் பஞ்ச பாஷாண சோமநாத லிங்கம் . இதன் தீர்த்தம் , தேனை கடந்த 1 வருட காலம் உபயோகப் படுத்தியுள்ளேன் . பல நண்பர்களுக்கும் கொடுத்துளேன் நல்ல முனேற்றம் பலருக்கு ஏற்பட்டுள்ளது ... 


ஆற்காட்டியிலிருந்து தெற்கே 8 k.m

ஆரணியிளிருந்து வடக்கே 18. k.m

பேருந்து நிறுத்தம் : திமிரி
( திமிரி மார்கெட் வழியாக திமிரி கோட்டையிலுள்ள இவ்வாலயத்தை அடையலாம் )











தொடர்புக்கு :
திரு A.S.இராதாகிருஷ்ணன் சுவாமிகள்,
ஸ்ரீ சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் திருக்கோயில்,
திமிரி - 632512.
ஆற்காடு வட்டம், வேலூர் மாவட்டம்.
அலைபேசி எண் : 93447 30899.