Tuesday, 8 April 2014

பணம் வாங்காமல் ஓட்டுப்போட்டால் சைவம்

பணம் வாங்காமல் ஓட்டுப்போட்டால், சைவம் ‘‘ வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டால், அசைவம்’’நடிகர் பார்த்திபன் ருசிகர பேச்சு



சென்னை,
‘‘பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டால் அசைவம், வாங்காமல் ஓட்டுப்போட்டால் சைவம்’’ என்று நடிகர் பார்த்திபன் கூறினார்.
சினிமா பட விழா
பொய் சொல்ல போறேன், கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வதிருமகள், தலைவா ஆகிய படங்களை டைரக்ட்டு செய்த விஜய் இயக்கி இருக்கும் புதிய படம் ‘சைவம்.’ இந்த படத்தில் நடிகர் நாசர், சிறுமி சாரா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.
ஏ.எல்.அழகப்பன் படத்தை தயாரித்து இருக்கிறார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
பாடல்களை டைரக்டர் கவுதம் வாசுதேவ்மேனன் வெளியிட, நடிகைகள் அனுஷ்கா, அமலாபால் ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டார்கள்.
பார்த்திபன் பேச்சு
விழாவில், டைரக்டரும், நடிகருமான பார்த்திபன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–
நான் இந்த விழாவுக்கு, வேட்டி கட்டி வந்ததை பார்த்து, என்னிடம் சிலர் என்ன? வேட்டி கட்டி இருக்கீங்க? என்று கேட்டார்கள். கட்டாவிட்டால் அவிழ்ந்து விடும் என்று சொன்னேன். ‘ஜோக்’கில் கூட சைவ ‘ஜோக்’, அசைவ ‘ஜோக்’ என்று இரண்டு உண்டு. அதேபோல முத்தத்திலும் சைவ முத்தம், அசைவ முத்தம் என இரண்டு வகை முத்தம் இருப்பதாக கவிஞர் வைரமுத்து கூறி இருக்கிறார்.
சிங்கம், சைவமா? அசைவமா? என்று கேட்டால் எல்லோரும், அசைவம் என்று தான் சொல்வார்கள். நான் யு.டியூப்பில் ஒரு படம் பார்த்தேன். ஒரு சிங்கம் குரங்கை கடித்து வாயினால் கவ்வி இழுத்துக்கொண்டு வந்தது. அப்போது குரங்கின் வயிற்றில் இருந்து ஒரு குட்டி கீழே விழுந்தது. அந்த குட்டி தட்டுத்தடுமாறி எழுந்து நிற்க முயன்றது. உடனே சிங்கம் குரங்கை விட்டுவிட்டு அதன் குட்டியை கவ்வியபடி தன் குட்டிகள் இருக்கும் இடத்துக்கு கொண்டு வந்தது. அந்த குரங்குக் குட்டியை சிங்கம் தடவிக் கொடுத்தது.
குரங்குக் குட்டியை இன்னொரு சிங்கம் கடிக்க வந்தபோது அந்த சிங்கத்தை இந்த சிங்கம் விரட்டி அடித்தது. இப்போது சொல்லுங்கள், சிங்கம், சைவமா, அசைவமா?. உணவால் சைவமா, அசைவமா? என்பது முக்கியம் அல்ல. உணர்வால் சைவமா, அசைவமா? என்பது தான் முக்கியம்.
ஓட்டு
பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டால் அதற்கு பெயர், அசைவம். வாங்காமல் ஓட்டுப்போட்டால் சைவம். டைரக்டர்களில் விஜய் மாதிரி சைவமான ஆளை பார்தத்தில்லை. அவர் உணர்வுகளின் அடிப்படையில் படம் எடுக்கிறவர். ‘‘திருவள்ளுவருக்கு கூட அறத்துபால், பொருட்பால், காமத்துபால் ஆகிய 3 பால்களைத் தான் தெரியும். திருவள்ளுவரை விட, விஜய் பெரிய ஆள். அவருக்கு அமலாபாலையே தெரியுமே... விஜய், திருமணத்துக்கு பின் முத்தத்தில் சைவமாக இருந்தால், ‘அமலா’க்கப்பிரிவினர் வந்து கைது செய்து விடுவார்கள்’’.
இவ்வாறு பார்த்திபன் தமாசாக பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில், தமிழ் திரைபட தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் கேயார், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், எடிட்டர் மோகன், டைரக்டர்கள் சங்கத்தலைவர் விக்ரமன், டைரக்டர்கள் ஆர்.சுந்தர்ராஜன், வஸந்த், சமுத்திரகனி, கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் ‘ஜெயம்’ ரவி, விஜய் சேதுபதி, சித்தார்த் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
முன்னதாக பட அதிபர் ஏ.எல்.அழகப்பன் அனைவரையும் வரவேற்றார். டைரக்டர் விஜய் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment